2017-09-12 15:51:00

பொதுவான கொள்கை அமைப்பில் தண்ணீருக்கு முக்கியத்துவம்


செப்.12,2017. ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையாகவுள்ள, சுத்தமான குடிநீரைப் பெறும் உரிமை செயல்படுத்தப்படுவதைத் தடைசெய்யும் தன்னல ஆதாயங்களுக்கு, நடைமுறை தீர்வுகளைக் காண்பதற்கு, பன்னாட்டு சமுதாயத்திற்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது என்று, திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் மனித உரிமைகள் அவையின் 36வது அமர்வில், குடிநீரும், நலவாழ்வும் என்ற தலைப்பில் சிறப்பு ஆய்வாளர் சமர்ப்பித்த அறிக்கை பற்றி உரையாற்றிய, பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், பொதுவான கொள்கை அமைப்பில், தண்ணீருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கூறினார்.

தண்ணீரை நிர்வகிப்பதில், அதைப் பயன்படுத்துவோர், அனைத்து மட்டங்களிலும் அது குறித்து திட்டமிடுவோர், கொள்கை உருவாக்குவோர் ஆகிய எல்லாரின் ஈடுபாடு அவசியம் எனவும் பேராயர் கூறினார்.

சுத்தமான குடிநீரைப் பெறுவது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்றும், தண்ணீரைப் பெறுவதற்குரிய நம் உரிமை, தண்ணீரைப் பாதுகாப்பதற்குரிய நம் கடமையாகவும் உள்ளது என்ற, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றையும், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் அமர்வில் எடுத்துச் சொன்னார் பேராயர் யுர்க்கோவிச்.

பேராயர் இவான் யுர்க்கோவிச் அவர்கள், ஜெனீவாவிலுள்ள ஐ.நா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றுகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.