2017-09-12 11:59:00

தலைவர்கள் பொது நலனில் அக்கறைகொண்டு செயல்பட அழைப்பு


செப்.12,2017. பிரிவினைகள் மற்றும் கருத்தியல் சார்புடைய ஆதாயங்களைப் பின்னுக்குத் தள்ளி, முழு மனித சமுதாயத்தின் பொதுவான நலனைத் தேடுமாறு, உலகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 72வது பொது அவை (UNGA 72) இச்செவ்வாயன்று தொடங்கும்வேளை, உலகத் தலைவர்கள் பொது நலனில் அக்கறைகொண்டு செயல்படுமாறு, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியில் விண்ணப்பித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நியு யார்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் செப்டம்பர் 12, இச்செவ்வாயன்று ஆரம்பிக்கும் 72வது ஐ.நா. பொது அவை, செப்டம்பர் 25ம் தேதி நிறைவடையும்.

UNGA 72 என அழைக்கப்படும் இப்பொது அவையின் பொது விவாதங்கள், செப்டம்பர் 19ம் தேதி, செவ்வாயன்று, “மக்களை மையப்படுத்தல் : நீடித்த நிலையான பூமிக்கோளத்தில் எல்லாருக்கும் அமைதி மற்றும், தரமான வாழ்வை அமைப்பதற்கு முயற்சித்தல்” என்ற தலைப்பில் ஆரம்பிக்கும்.

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையின் முதல் அமர்வு, 1946ம் ஆண்டு சனவரி பத்தாம் தேதி, இலண்டன் மெத்தடிஸ்ட் மையத்தின் அறையில் நடைபெற்றது. இதில் 51 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தற்போது இப்பொது அவையில் 193 நாடுகள் பங்கேற்கின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.