2017-09-12 16:00:00

கடத்தப்பட்ட சலேசிய அ.பணி டாம் உழுன்னலில் விடுதலை


செப்.12,2017. 2016ம் ஆண்டு ஏமன் நாட்டின் ஏடனில் கடத்தப்பட்ட சலேசிய இந்திய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் (Tom Uzhunnalil) அவர்கள், செப்டம்பர் 12, இச்செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் என, தென் அரேபிய அப்போஸ்தலிக்கப் பிரதிநிதி ஆயர் பால் ஹிண்டர் (Paul Hinder) அவர்கள் அறிவித்தார்.

இவ்விடுதலை குறித்து இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ள ஆயர் பால் ஹிண்டர்  அவர்கள், அருள்பணியாளர் டாம் அவர்களின் விடுதலைக்காக முயற்சிகள் எடுத்தவர்கள், அவர் நலத்தோடு விடுதலை செய்யப்பட வேண்டுமெனச் செபித்தவர்கள் ஆகிய எல்லாருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்திய ஆயர் பேரவையும், தென் அரேபிய அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியும், அருள்பணியாளர் டாம் அவர்களின் விடுதலைக்காக முயற்சித்த தங்கள் அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

அருள்பணியாளர் டாம் அவர்களின் விடுதலைக்காக, ஏமன் நாட்டு அரசு முக்கிய காரணியாக இருந்தது என, இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

58 வயது நிரம்பிய, கேரளாவைச் சேர்ந்த, சலேசிய அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்கள், 2016ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி, ஏடனில், அன்னை தெரேசாவின் பிறரன்பு மறைப்பணியாளர் சபையின் முதியோர் இல்லத்திலிருந்து, இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். அந்த முதியோர் இல்லத்தை இஸ்லாம் தீவிரவாதிகள் தாக்கியதில் அன்னை தெரேசா சபையின் நான்கு அருள்சகோதரிகள் மற்றும் 12 பேர் கொல்லப்பட்டனர்.

18 மாத பிணையலுக்குப் பின், தற்போது ஏமனிலிருந்து மஸ்கட் சென்றுள்ள அருள்பணி டாம் அவர்கள், விரைவில் இந்தியா திரும்புவார் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.