2017-09-10 13:00:00

அருள்பணியாளர், துறவியருக்கு திருத்தந்தையின் உரை


செப்.10,2017. அன்பு சகோதர ஆயர்களே, அருள்பணியாளரே, துறவியரே, குருமாணவர்களே, குடும்பத்தினரே, உண்மையான திராட்சை செடி என்று இயேசு கூறிய நற்செய்திப் பகுதியை வாசிக்கக் கேட்டோம். இச்சொற்களை, இயேசு, தன் இறுதி இரவுணவின்போது சீடர்களிடம் கூறினார். மேலறையில் நிகழ்ந்த அந்த முதல் திருப்பலியில், இயேசு, மனம் திறந்து தன் சீடர்களிடம் பேசினார்; புதிய உடன்படிக்கையை அவர்களுக்கு வழங்கினார். அதே மேலறையில், மரியாவும், ஏனைய பெண்களும் சீடர்களோடு கூடி, செபித்து வந்தனர் (திருத்தூதர் பணிகள் 1: 13-14). அன்று அவர்கள் கூடிவந்ததுபோல், நாம் இங்கு கூடிவந்துள்ளோம். அருள்சகோதரி லெய்டி, மரியா இசபேல், அருள்பணி யுவான் ஃபெலிப்பே ஆகியோர் பகிந்துகொண்டதைக் கேட்டோம்.

இளையோரில் பலர், வாழும் இயேசுவை, தங்கள் குழுமங்களில் கண்டுகொண்டுள்ளனர். இவ்வுலகின் தீமைகளுக்கு எதிராக, இளையோர் பொறுமையிழந்து கூடிவருகின்றனர். இந்த அநீதிகளுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுப்பதை, இயேசுவின் பெயரால் செய்யும்போது, அவர்கள் 'தெரு போதகர்களாக' மாறி, மக்கள் வாழும் இடங்களுக்கு, இயேசுவை ஏந்திச் செல்கின்றனர்.

இயேசு கூறும் திராட்சைக்கொடி, 'உடன்படிக்கையின் மக்களே'. இயேசுவுடன் ஒன்றித்திருக்கும்வரை, திராட்சைக்கொடி பலன்தரும்; கோபம், ஏமாற்றம் ஆகியவற்றால், செடியைவிட்டு விலகிச்செல்லும் கொடி, காய்ந்துபோகும்.

திராட்சைச்செடி வளரும் பூமியான கொலம்பியா நாடு, எவ்வாறு உள்ளது? ஒளியும், இருளும் கலந்த ஒரு குழப்பமானச் சூழல் இந்நாட்டில் நிலவி வருகிறது. இந்தக் குழப்பங்களின் நடுவே, இறைவனின் அழைத்தல் தொடர்ந்து ஒலிக்கிறது. விவிலியத்தில், ஆதிகாலம் முதலே, குழப்பங்கள் நிலவிவந்தன. காயின் ஆபேலைக் கொன்றதுமுதல், இவ்வுலகில் இரத்தம் சிந்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இவற்றிற்கிடையே, இறைவனின் அழைத்தலும் மக்களை தொடர்ந்து வந்தடைந்துள்ளது.

திராட்சைச்செடியுடன் இணைந்த ஒவ்வொரு கொடியும், பலன் தருவதற்கு அழைக்கப்பட்டுள்ளது. கொடி வாழ்வதற்கு, இயேசு என்ற செடியிலிருந்து சாறைப் பெறவேண்டும். இயேசுவோடு இணையாமல், தங்கள் பதவி, முன்னேற்றம் என்ற ஏணியில் ஏற விழைவோர், பணம், புகழ் என்ற சோதனைகளுக்கு உட்படுகின்றனர்.

நான் அடிக்கடி சொல்லிவருவது இதுதான்: பணம் உள்ள 'பர்ஸ்' வழியே, சாத்தான் நுழைகிறது. 'நீங்கள் கடவுளுக்கும், செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது' (மத்தேயு 6: 21,24) மக்கள் நம்மீது கொண்டிருக்கும் மதிப்பையும், செல்வாக்கையும் பயன்படுத்திக்கொண்டு, பணிவிடை பெறுவதற்கோ, செல்வங்கள் சேர்ப்பதற்கோ முயற்சிகள் செய்யக்கூடாது.

கனி தராத கொடிகளை தறித்துவிடும் இறைவன், மிகுந்த கனி தருவதற்கென, கொடிகளை கழித்தும் விடுகிறார். முற்றிலும் வெட்டப்பட்டு உலர்ந்துபோகாமல் இருக்க, இயேசு கூறும் வழி, அவரோடு இணைந்திருத்தல். இயேசுவோடு இணைந்திருப்பதற்கு, மூன்று வழிகளைக் கூற விழைகிறேன்.

1. கிறிஸ்துவின் மனிதத்தன்மையை தொடுவதன் வழியாக, குறிப்பாக, துயருறுவோருக்கு உதவிகள் செய்யும் நல்ல சமாரியராக வாழ்வதன் வழியாக, இயேசுவோடு இணைந்திருக்கிறோம்.

2. அவரது இறைத்தன்மையை தியானம் செய்வதன் வழியாக, அதாவது, விவிலியத்தை வாசிப்பது, ஒவ்வொருநாளும் செபிப்பது இவற்றின் வழியே இயேசுவோடு இணைந்திருக்கிறோம்.

3. கிறிஸ்துவுடன் இணைந்திருப்பதால், வாழ்வில் மகிழ்வடைகிறோம். உண்மையான மகிழ்வுடன் இருந்தால், சோகமான சீடர்களாக, கசப்பு நிறைந்த திருத்தூதர்களாக வாழ மாட்டோம். மகிழ்வைப் பறைசாற்றி, நம்பிக்கையின் தூதர்களாக வாழ்வோம்.

பெரு வெள்ளத்திற்குப்பின், நோவா, புதிய துவக்கத்தின் அடையாளமாக, திராட்சைத் தோட்டம் ஒன்றை உருவாக்கினார். வாக்களிக்கப்பட்ட நாட்டைப் பார்வையிட, மோசே அனுப்பிய தூதர்கள், அந்நாட்டின் செழிப்பை உணர்த்த, திராட்சைக் கனிகளைக் கொணர்ந்தனர்.

கொலம்பியா நாடும், கனிகள் தரும் திராட்சைச்செடியாக இருக்கவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார். வெறுப்பு, பகைமை என்ற வெள்ளம் தீர்ந்தபின், அமைதி, நீதி என்ற கனிகள் இந்நாட்டில் விளையவேண்டும் என்று இறைவன் விரும்புகிறார்.

இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக! கொலம்பியா நாட்டில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை ஆசீர்வதிப்பாராக! எனக்காக செபிக்க மறவாதீர்கள்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.