2017-09-10 12:37:00

Medellín விமானத்தள திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


செப்.10,2017. அன்பு சகோதர, சகோதரிகளே, தன்னால் அழைக்கப்பட்ட சீடர்கள், தொழுநோயாளிகள், ஊனமுற்றோர், பாவிகள் என பல்வேறு வகைப்பட்ட மக்களையும்  தங்கள் பாதையில் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை தெளிவாக உரைக்கிறார், இயேசு. இந்த உண்மைச் சூழல்கள், நிலைபெற்ற விதிகளைத் தாண்டிச் செல்வதை எதிர்பார்க்கின்றன. சட்டத்திற்கு தவறான விளக்கம் கொடுத்து, அதற்குள்ளேயே முடங்கிப்போகும் பரிசேயர்களின் சுதந்திரத்திலிருந்து வேறுபட்டது, இயேசு, தன் சீடர்களுக்கு வழங்கும் சுதந்திரம்.

சட்டங்களை மேலோட்டமாகக் கண்டு, அதில் நிறைவைப் பெற இயேசு வரவில்லை, மாறாக, சட்டங்களை நிறைவேற்றவே அவர் வந்தார். நம்மிடமும் அதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார். எது வாழ்வில் முக்கியமானதோ, அதைத் தேடிச் செல்வதையும், நம்மைப் புதுப்பிப்பதையும், அதில் நம்மை ஈடுபடுத்துவதையும், மூன்று விடயங்களாக  நம்மிடம் எதிர்பார்க்கிறார் இயேசு.

எது அத்தியவாசியமானதோ அதைத் தேடிச் செல்லவேண்டும். வாழ்விற்குத் தேவையான மதிப்பீடுகளில் ஆழமாகச் செல்வதைக் குறித்து நிற்கிறது இது. சீடத்துவம் என்பது, கடவுள் மற்றும் அவரின் அன்பில் வாழும் அனுபவமே. இது, தேங்கி நிற்கும் ஒன்றல்ல, மாறாக, கிறிஸ்துவை நோக்கி சென்று கொண்டேயிருக்கும் ஒன்று. இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிமடுத்து, ஒவ்வொரு நாளும் நம்மை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒன்றாகும். இந்த வார்த்தைகள், நம் சகோதர சகோதரிகளின் தேவைகளையும், பசியால் வாடுவோர் மற்றும் நோயாளிகளின் துன்பங்களையும் நாம் அறியச் செய்கின்றது.

இரண்டாவதாக, புதுப்பிக்கப்படுதல். அன்று, இறுகிய மனநிலையிலிருந்த சட்டவல்லுனர்களை விடுவிக்க, இயேசு அவர்களை உலுக்கியதுப்போல, இன்று, தூய ஆவியானவர், திருஅவையைப் பிடித்து உலுக்குகிறார். தன் சுகங்களையும், பொருள் ஆசைகளையும் விட்டு திருஅவை வெளிவர வேண்டும் என விரும்புகிறார். புதுப்பித்தல் குறித்து நாம் அஞ்சத் தேவையில்லை. திருஅவைக்கு புதுப்பித்தல் தேவைப்படுகின்றது. பசியின் அழுகுரல்களும், நீதிக்கான தாகமும், நம்மை நோக்கி எழுந்து, புதிய பதிலுரைகளை எதிர்நோக்கும்போது, மனவுறுதியையும் தியாகத்தையும் உள்ளடக்கிய புதுப்பித்தல் தேவைப்படுகின்றது. கொலம்பியாவின் சூழல்கள், இயேசுவின் வாழ்வு வழிகளை பின்பற்ற, அவரின் சீடர்களுக்கு அழைப்பு விடுக்கின்றன. அன்பு என்பது, வன்முறையற்ற, ஒப்புரவு மற்றும் அன்பின் செயல்பாடுகளாக மாற்றம் பெறவேண்டிய தேவை உள்ளது. 

மூன்றாவதாக, நாம் நம்மை முற்றிலுமாக ஈடுபடுத்தவேண்டும். தாவீதும், அவருடன் சென்றவர்களும், பசியாக இருந்தபோது, கோவிலுனுள் சென்றது போலவும், இயேசுவின் சீடர்கள் பசியாய் இருந்தபோது, தானியக் கதிர்களை கொய்து உண்டதுபோலவும், நாம் துணிவுடன் செயல்படவேண்டியுள்ளது. எத்தனையோ பேர் இன்று, பசியால் வாடுகின்றனர், கடவுளை அறியும் பசியால், மாண்பைப் பெற எழும் பசியால், துடிக்கின்றனர். ஏனெனில், அவர்களுக்கு அவை கொடுக்கப்படவில்லை. திருஅவை என்பது, எல்லையை காத்து நிற்கும் நிலையம் அல்ல. அது திறந்த கதவுகளைக் கொண்டது. வரவேற்க மறுக்கும் இதயம் கொண்டவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கமுடியாது. திருஅவைக்குள் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள், இங்கு பாகுபாடுகள் இல்லை. நாம் வெறும் ஊழியர்களே. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இடம்பெறும் சந்திப்பிற்கு நாம் தடைபோட முடியாது. மக்கள் கூட்டத்தைக் கண்ட இயேசு, தன் சீடர்களை நோக்கி, 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்று கூறினார். இதுதான் நம் பணியும்கூட. கடவுளின் அப்பத்தை உண்ண, கடவுளின் அன்பை உண்ண, நாம் உயிருடன் வாழ உதவும் அப்பத்தை உண்ண, நாம் பணியாற்ற வேண்டும். இன்றைய திருவழிபாட்டில் நினைவு கூரப்படும் புனித பீட்டர் கிளாவர், இதனை நன்கு புரிந்துகொண்டு செயலாற்றினார். 'என்றென்றும் கறுப்பின மக்களின் அடிமை' என தன்னை அறிவித்து, அவர்களின் துன்பங்களை அகற்ற பாடுபட்டார்.

விசுவாசம் மற்றும் நற்செய்தி நம்பிக்கையில் உங்களை உறுதிப்படுத்த நான் இங்கு வந்துள்ளேன்.  உறுதிப்பாட்டிலும் சுதந்திரத்திலும் இயேசுவில் நிலைத்திருங்கள். அவரில் நிலைத்திருப்பதே, நமக்கு சுதந்திரத்தை வழங்குகிறது. என்ன செய்தாலும் அதில் இயேசுவை வெளிப்படுத்துங்கள். இயேசுவின் பாதையை துணிவுடன் மேற்கொள்ளுங்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.