2017-09-08 15:54:00

பொகோட்டாவில் திருத்தந்தை : விசுவாசிகள், ஆயர்கள் சந்திப்பு


செப்.08,2017. செப்டம்பர் 07, இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு கொலம்பிய அரசுத்தலைவர் மாளிகையிலிருந்து 400 மீட்டர் தூரத்திலுள்ள, பொலிவார் வளாகத்திலுள்ள அமல அன்னை பேராலயத்திற்குத் திறந்த காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அவ்வளாகத்தில் மக்கள் கடல் அலையென திரண்டு, திருத்தந்தை வாழ்க வாழ்க என சப்தமிட்டனர். திருத்தந்தையின் கார் அவ்வளாகத்தைச் சுற்றிவந்து அதிலிருந்து அவர் இறங்கியபோது, ஒரு வயதுமுதிர்ந்த அருள்சகோதரியை காவல்துறையினர் தூக்கி திருத்தந்தையின் ஆசீர்பெறச் செய்தனர். பொகோட்டா நகரின் சாவியை ஒரு சிறுமி ஏந்தி நிற்க, அந்நகர மேயர் அதை திருத்தந்தைக்கு அளித்தார். பின், திருத்தந்தை பேராலயம் சென்றார். அங்குச் சிறிதுநேரம் அமைதியாகச் செபித்தார் திருத்தந்தை. பின், மாதா புகழ்மாலை பாடப்பட்டது. அன்னை மரியா படத்தின்முன் ஒரு செபமாலையை அர்ப்பணித்து, அப்பேராலய தங்கப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும் இவ்வளாகத்தில் கூடியிருந்த இருபதாயிரத்திற்கு மேற்பட்ட இளையோர் உட்பட எண்ணற்ற மக்களுக்கு, பேராயர் இல்லத்தின் பால்கனியிலிருந்து உரை வழங்கி, வாழ்த்துச் சொல்லி ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதன்பின், பொகோட்டா பேராயர் இல்லத்தில் அந்நாட்டின் ஏறத்தாழ 130 ஆயர்களைச் சந்தித்து, முதல் அடியை எடுத்து வைப்போம், ஆயர்கள் சுதந்திரம் பற்றிப் பேச வேண்டும், இதில் அரசியல்வாதிகள் போன்று பேசக் கூடாது என்று ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். கொலம்பிய ஆயர்களைச் சந்தித்து அவர்களுக்கு தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டபின், திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தி சிறிது நேரம் ஓய்வெடுத்தார் திருத்தந்தை. இவ்வியாழன் பிற்பகல் 3 மணிக்கு, CELAM எனப்படும், இலத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளின் 22 ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் செயல்திட்ட குழுவினர் 62 பேரைச் சந்தித்தார் திருத்தந்தை. முதலில் CELAM கூட்டமைப்பின் தலைவர் கர்தினால் Rubén Salazar Gómez அவர்கள் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். பின் திருத்தந்தையும், இக்குழுவினருக்கு உரையாற்றினார். கடந்தகால நினைவுகளில் மூழ்கியிருக்காமல், இளையோர், பெண்கள் உட்பட அனைவரிடமும் தெரிகின்ற நம்பிக்கைக்கு உயிரூட்டம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

CELAM கூட்டமைப்பின் செயல்திட்ட குழுவினரைச் சந்தித்தபின், அங்கிருந்து சைமன் பொலிவார் பூங்காவிற்கு, ஆறு கிலோ மீட்டர் தூரம் காரில் சென்றார் திருத்தந்தை. வெனெசுவேலா நாட்டைச் சேர்ந்த பொலிவார் அவர்கள், இலத்தீன் அமெரிக்காவில் பல நாடுகள் விடுதலை பெறுவதற்கு முக்கிய பங்காற்றியவர். அப்பூங்காவிற்கு, திருத்தந்தை திறந்த காரில் பலத்த பாதுகாப்புடன் சென்ற சென்றுகொண்டிருந்தாலும், பொது மக்களும் திரள்திரளாக எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு திருத்தந்தையை பார்த்து மகிழ்ந்தனர். திருப்பலியின் ஆரம்பத்தில் முன்வரிசையில் உட்கார வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிச் சிறாரை முத்தமிட்டு ஆசீர்வதித்தார் திருத்தந்தை. ஒன்பது சிறார் பாடல் ஒன்றைப் பாடினர். ஒரு சிறுமியும் அழுகையுடன் திருத்தந்தையிடம் பேசினார். திருத்தந்தையும் அச்சிறாரிடம் சில கேள்விகளைக் கேட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.