2017-09-08 15:59:00

சைமன் பொலிவார் பூங்காவில் திருத்தந்தை திருப்பலி


செப்.08,2017. பொகோட்டா நகரின் சைமன் பொலிவார் பூங்காவில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் ஏறத்தாழ 13 இலட்சம் விசுவாசிகள் பங்குபெற்றனர். ஆனால் ஏழு இலட்சம் பேர் வருவார்கள் எனவே எதிர்பார்க்கப்பட்டது. இத்திருப்பலியில் மறையுரையும் ஆற்றினார் திருத்தந்தை. மற்ற நாடுகளின் மக்களைப் போன்றே, கொலம்பிய மக்களையும், அநீதி, சமூக சமத்துவமின்மை, ஊழல், தன்னலம், மனிதவாழ்வை அவமதித்தல், பழிவாங்கும் உணர்வு, காழ்ப்புணர்வு போன்ற அடர்த்தியான இருள் அச்சுறுத்துகின்றது. அதற்கு இடம்கொடுக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. சமத்துவமின்மை சமூகத் தீமைகளுக்கு ஆணிவேர் என்பதை நாம் மறக்கக் கூடாது எனவும் திருத்தந்தை கூறினார். இத்திருப்பலியின் இறுதியில் மேடையில் வைக்கப்பட்டிருந்த அன்னை மரியா திருவுருவத்திடம் செபித்தார் திருத்தந்தை. இத்துடன் இவ்வியாழன்தின பயணத் திட்டங்கள் நிறைவுக்கு வந்தன. இந்நாள்களில், பொகோட்டாவில், ஏன் கொலம்பியா எங்கும், திருத்தந்தை அழைப்பு விடுத்துவரும் மன்னிப்பு, ஒப்புரவு, அமைதி போன்றவையே ஒலித்துக்கொண்டிருக்கின்றன. தென் அமெரிக்காவில் நீண்டகால உள்நாட்டுச் சண்டையின் பாதிப்பை அனுபவித்துள்ள கொலம்பியாவில் நிலையான, நீடித்த அமைதி நிலவ திருத்தந்தையின் இப்பயணம் உதவுவதற்கு நாமும் செபிப்போம். இச்சண்டையில், 2 இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அறுபதாயிரம் பேர் காணாமல்போயுள்ளனர் மற்றும் இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்துள்ளனர். ஏறக்குறைய ஏழாயிரம் முன்னாள் புரட்சியாளர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சாதாரண வாழ்வுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். இவ்வளவு கொடூரங்களைச் செய்த புரட்சியாளர்களுக்கு இவ்வளவு சலுகையா எனவும், கொலம்பியாவில் ஒரு குழு கேட்டு வருகிறது. பாதி நூற்றாண்டு மோதல்களை எதிர்கொண்டுள்ள கொலம்பியாவைக் குணப்படுத்துவதற்கு, மன்னிப்பை ஊக்குவிக்க வேண்டுமென, திருத்தந்தையும், இளையோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் எதிர்காலத்தை வெறுப்பின் சுமையின்றி நோக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். ஆம். மனக்காயங்களைக் குணப்படுத்தி அமைதிக்கு வழியமைப்பது மன்னிப்பும் ஒப்புரவுமே.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.