2017-09-07 16:20:00

கவுரி இலங்கேஷ் கொலைக்கு இந்திய ஆயர்கள் கண்டனம்


செப்.07,2017. வன்முறையாளர்களின் குண்டுகளுக்குப் பலியான கவுரி இலங்கேஷ் (Gauri Lankesh) என்ற பெண் எழுத்தாளரின் வீரத்திற்கும், உண்மைக்கென அவர் அளித்த அர்ப்பணிப்பிற்கும் தலைவணங்குகிறோம் என்று இந்திய ஆயர் பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 5, இச்செவ்வாய் இரவு, பெங்களூருவில், தன் இல்லத்திற்கு திரும்பிவந்த வேளையில், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட கவுரி இலங்கேஷ் அவர்களின் மரணம் குறித்து, இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியோடோர் மஸ்கரீனஸ் அவர்கள், அறிக்கையொன்றை இப்புதனன்று வெளியிட்டார்.

அண்மைய ஆண்டுகளில் இந்தியாவில் அநீதிகளுக்கு குரல் கொடுத்த Kalburgi, Govind Pansare, Narendra Dabholkar ஆகிய எழுத்தாளர்களைத் தொடர்ந்து, கவுரி இலங்கேஷ் அவர்களின் மரணம் நிகழ்ந்திருப்பது, இந்நாட்டில், வெறுப்பின் அடிப்படையில் வளர்ந்துவரும் குற்றங்களுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு என்று ஆயர்களின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதற்கிடையே, எழுத்தாளர் கவுரி இலங்கேஷ் அவர்கள் கொலையுண்டதைக் கண்டனம் செய்து, பெங்களூரு பேராயர் பெர்னார்ட் மொராஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், 'சுதந்திர இந்தியாவில் வன்முறைக்கு இடமில்லை' என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகழ்பெற்ற கன்னட கவிஞர், இலங்கேஷ் அவர்களின் மகள், 55 வயதான கவுரி இலங்கேஷ் அவர்கள், குஜராத் கலவரம், கந்தமால் கலவரம் உட்பட, இந்தியாவில், மதத்தின் பெயரால் நடைபெற்ற கலவரங்கள் குறித்தும், பேச்சுரிமைக்கு எதிராக நிகழ்ந்துள்ள வன்முறைகள் குறித்தும், அவர் நடத்திவந்த Lankesh Patrike என்ற இதழில் துணிவுடன் எழுதி வந்தார்.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.