2017-09-06 15:12:00

திருத்தந்தையின் கொலம்பியத் திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது


செப்.06,2017. மனிதராய்ப் பிறந்த எல்லாருமே துயரின்றி அமைதியாக வாழவே விரும்புகின்றனர். ஆனால் அது பலரது வாழ்வில் எளிதில் எட்டமுடியாததாகவே உள்ளது. இந்நிலை தனிமனித வாழ்வில் மட்டுமல்ல, நாடுகளின் வாழ்விலும்  காணப்படுகின்றது. மோதல்களை மனிதர்கள் உருவாக்காமல் விட்டாலே, அமைதி தானாக நிகழ்ந்துவிடும். ஆயினும் மோதல்களின் கொடுமையில் நாடே துன்பத்தில் தவிக்க, இறுதியில், போரிடும் குழுக்கள், அமைதி உடன்பாட்டிற்கு வருகின்றன. புயலுக்குப் பின் அமைதி என்பதுபோல், நாட்டு மக்கள் சிறிது சிறிதாக அமைதியான வாழ்வுக்குத் திரும்பி, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுபடுகின்றனர். இதுதான் இன்று கொலம்பிய நாட்டில் இடம்பெற்று வருகின்றது. தென் மெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கொலம்பியாவில், 52 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டுச் சண்டை, 2016ம் ஆண்டில் நிறைவுக்கு வந்தது. இத்தனை ஆண்டுகால ஆயுத மோதல்களில், ஏறத்தாழ இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் பேர் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தனர். எண்ணற்ற ஆள்கடத்தல்களும் இடம்பெற்றன. தொடர் அமைதி பேச்சுவார்த்தைகளுக்குப் பின், இந்நாட்டில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதில், திருத்தந்தைக்கும், திருப்பீடத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது. அமைதியை நோக்கி முதல் அடியை எடுத்து வையுங்கள் என்ற அழைப்புடன், இந்நாட்டிற்கு, தனது ஐந்து நாள் திருத்தூதுப் பயணத்தை தொடங்கியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 06, இப்புதன் காலை 10.30 மணிக்கு, வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து புறப்பட்டார். கொலம்பியாவுக்குப் புறப்படுவதற்குமுன், சாந்தா மார்த்தா இல்லத்தில், ஐந்து பேர் கொண்ட இரு குடும்பத்தினரைச் சந்தித்தார் திருத்தந்தை. இக்குடும்பத்தினர், உரோம் நகரின், Ponte Mammolo பகுதியில், இந்தக் கோடையில் ஏற்பட்ட தீ விபத்தில், தங்கள் வீடுகளை இழந்தவர்கள். இவர்களுக்கு, திருத்தந்தையின் சார்பில், உதவிகள் ஆற்றப்பட்டுள்ளன. மேலும், வெளி நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் முன்னரும், அதற்குப் பின்னரும், உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று, Salus Populi Romani அதாவது உரோமைக்கு சுகம் அளிக்கும் அன்னை மரியிடம் செபிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் திருத்தந்தை, இச்செவ்வாய் மாலையும், அப்பசிலிக்கா சென்று அன்னை மரியிடம் செபித்தார். இப்புதன் முற்பகல் 11.13 மணிக்கு, உரோம் ஃபியூமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து, ஆல் இத்தாலியா A330 விமானத்தில், கொலம்பிய நாட்டுத் தலைநகர் பொகோட்டா (Bogota')வுக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். 12 மணி, 25 நிமிடங்கள் கொண்ட இந்த விமானப் பயணத்தில், தான் கடந்துசெல்லும் இத்தாலி, பிரான்ஸ், இஸ்பெயின், போர்த்துக்கல்லின் Azzorre தீவு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஓசியானியா பகுதி, புவர்த்தோ ரிக்கோ, ஹாலந்து நாட்டின் Antilles, வெனெசுவேலா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு தனது வாழ்த்தையும் செபங்களையும் தெரிவிக்கும் தந்திச் செய்திகளையும் அனுப்பினார். 9,825 கிலோ மீட்டர் தூர இந்த விமானப் பயணத்தில் தன்னோடு பயணம் செய்யும், பன்னாட்டுச் செய்தியாளர்களுக்கு வாழ்த்தும், நன்றியும் ஊக்கமும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கொலம்பிய நாட்டிற்கும், இந்தியாவுக்கும் உள்ள நேர இடைவெளி 10 மணி 30 நிமிடங்களாகும். அதாவது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொலம்பிய நாட்டைச் சென்று சேரும்போது, உள்ளூர் நேரம், இப்புதன் மாலை 4.30 மணியாக இருக்கும். ஆனால் இந்தியா, இலங்கைக்கு, செப்டம்பர் 07, இவ்வியாழன் அதிகாலை 3 மணியாக இருக்கும்.

கொலம்பியக் குடியரசு என்ற அதிகாரப்பூர்வ பெயரைக் கொண்டுள்ள கொலம்பியா, அமெரிக்கா என்ற புதிய கண்டத்தைக் கண்டுபிடித்த, இத்தாலியரான கிரிஸ்டோபர் கொலம்பஸ் (Cristoforo Colombo) அவர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது. தென் அமெரிக்க நாடான கொலம்பியா, மத்திய அமெரிக்காவிலும் நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டிற்கு வடமேற்கில் பானமா, கிழக்கில் வெனெசுவேலா, பிரேசில், தெற்கில் ஈக்குவடோர், மற்றும் பெரு நாடுகள், எல்லைகளாக அமைந்துள்ளன. மேலும், பசிபிக் பெருங்கடல் பகுதியில், 1,300 கிலோ மீட்டர் தூர கடற்கரையையும், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில், 1,600 கிலோ மீட்டர் தூர கரீபியன் கடற்கரையையும் இந்நாடு கொண்டிருக்கின்றது. இந்நாடு, ஒற்றையாட்சி, அரசியலமைப்பைச் சார்ந்த குடியரசாகும். தற்போதைய கொலம்பிய நாடு உள்ள பகுதியில், தொடக்கக் காலத்தில் முயிஸ்க்கா (Muisca), குயிம்பயா (Quimbaya), தயிரோனா (Tairona) போன்ற பழங்குடி மக்கள் வாழ்ந்துள்ளனர். உலகில், பல்வேறு இன மற்றும், மொழிகளை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகளில், கொலம்பியாவும் ஒன்று. இந்நாட்டின் பெரும்பாலான நகர்ப்புறங்கள், ஆன்டெஸ் மலைப்பகுதிகளில் உள்ளன.

இஸ்பானியர்கள், 1499ம் ஆண்டில் கொலம்பிய நாட்டுப் பகுதியில் முதலில் காலடி பதித்தனர். பின், 16ம் நூற்றாண்டின் முதல் பாதிப் பகுதியில் காலனி ஆதிக்கத்தைத் தொடங்கி, கிரனாடா என்ற புதிய அரசை உருவாக்கி, பொகோட்டாவை அதன் தலைநகரமாக அமைத்தனர். பின் 1819ம் ஆண்டில், கொலம்பியா இஸ்பானியர்களிடமிருந்து விடுதலை அடைந்தது. எனினும், 1830ம் ஆண்டில், பெரிய கிரானாடா என்ற கூட்டாட்சி கலைக்கப்பட்டது. தற்போதுள்ள கொலம்பிய நாடும், பானமா நாடுமே, புதிய கிரானாடா குடியரசாக உருவானது. இந்தப் புதிய நாடு, 1858ம் ஆண்டில் கிரெனடியக் கூட்டரசு எனவும், 1863ம் ஆண்டில் கொலம்பிய ஐக்கிய நாடுகள் எனவும் செயல்பட்டது. இறுதியில் 1886ம் ஆண்டில், இப்புதிய நாடு கொலம்பியக் குடியரசானது. 1903ம் ஆண்டில், கொலம்பியாவிலிருந்து பானமா பிரிந்து சென்றது. கொலம்பியா குடியரசாக செயல்பட்டாலும், 1960களில் கடும் ஆயுதமோதல்களை இந்நாடு எதிர்கொண்டது. கொலம்பிய அரசுக்கும், உப இராணுவ குழுக்களுக்கும், குற்றக்கும்பல்களுக்கும், FARC எனப்படும் வலதுசாரி கெரில்லா புரட்சிக்குழுவுக்கும், ELN என்ற தேசிய விடுதலை புரட்சி அமைப்புக்கும் இடையே ஆயுத மோதல்கள் நடந்தன. இம்மோதல்கள் தீவிரமடைவதற்கு, பன்னாட்டு நிறுவனங்களும், அமெரிக்க ஐக்கிய நாடும் முக்கிய காரணிகள் எனச் சொல்லப்படுகின்றது. இம்மோதல்கள் 1990ம் ஆண்டுகளில் தீவிரமடைந்து, பின் 2005ம் ஆண்டில் சற்று குறைந்தது பின் மீண்டும் சண்டை. எனினும், தொடர் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின், 2016ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி, கொலம்பிய அரசுக்கும், FARC புரட்சிக் குழுவுக்கும் இடையே, கியூபா நாட்டின் ஹவானாவில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே ஆண்டில் கொலம்பிய அரசுத்தலைவர் Juan Manuel Santos அவர்களுக்கு நொபெல் அமைதி விருதும் அறிவிக்கப்பட்டது.

கொலம்பியாவின் நிலப்பகுதிகள், அமேசான் மழைக்காடு, வெப்பமண்டல புல்வெளி, கரீபிய மற்றும் பசிபிக் அமைதிப் பெருங்கடல் கடற்கரைகளை உள்ளடக்கியுள்ளன. சுற்றுச்சூழலியல்படி பார்த்தால், இந்நாடு உலகின் 17 பெரும் பல்வகை உயிரின வகைகள் கொண்ட நாடுகளில் ஒன்றாக விளங்குகின்றது. இந்தப் பல்வகை உயிரினங்கள், ஒரு சதுர கிலோமீட்டர் வீதம் மிகவும் அடர்த்தியாக உள்ளன. பொருளாதாரத்தில், இலத்தீன் அமெரிக்காவில், நான்காவது பெரிய நாடாகவும், சிவெட்ஸ் (CIVETS) எனக் குறிப்பிடப்படும் ஆறு முன்னணி வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இஸ்பானியம், chibcha, idiomi போன்ற மொழிகள் பேசப்படுகின்றன. இந்நாட்டில், 47 விழுக்காட்டினர் Mestizo இனத்தவர், 23 விழுக்காட்டினர் Mulatti இனத்தவர், 1 விழுக்காட்டினர் அமெரிக்க இந்தியர், 20 விழுக்காட்டினர் வெள்ளையினத்தவர், 6 விழுக்காட்டினர் கறுப்பினத்தவர் வாழ்கின்றனர். சமயத்தைப் பொருத்தவரை, 93.9 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். இன்னும், பிரிந்த கிறிஸ்தவ சபையினர், முஸ்லிம்கள், புத்த மதத்தினர் மற்றும், தாவோயிச மதத்தினரும் வாழ்கின்றனர்.

1510ம் ஆண்டில், பானமா மற்றும் கொலம்பியாவுக்கு இடையிலுள்ள எல்லையில், தாரியென் எனும் பகுதியில், இஸ்பானியர்களுக்கும், கொலம்பிய மக்களுக்கும் இடையே முதன்முதலில் தொடர்பு ஏற்பட்டது. அங்குதான் முதல் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது. அந்நாட்டில் காலனி ஆதிக்கம் வளர வளர, ஆதிக்க நாடுகளிலிருந்து கத்தோலிக்க மறைப்பணியாளர்களும் அங்குச் சென்றனர். முதலில், 1550ம் ஆண்டில் தொமினிக்கன் மற்றும் பிரான்சிஸ்கன் துறவு சபைகள், பொகோட்டாவில் மறைப்பணிகளைத் தொடங்கின. பின், 1575ம் ஆண்டில் அகுஸ்தீனார் சபையும், 17ம் நூற்றாண்டில் இயேசு சபையும் அந்நாட்டில் மறைப்பணிகளைத் தொடங்கின. இவ்வாறு மறைப்பணியாளர்களால் படிப்படியாக வளர்ந்துவந்த கத்தோலிக்கம், தற்போது அந்நாட்டின் பெரும்பான்மையாக உள்ளது. கத்தோலிக்கர் நாட்டின் அமைதிக்கும், பொதுநலனுக்கும் அதிகமாக உழைத்து வருகின்றனர். மற்ற நாடுகளைப் போன்றே கொலம்பியத் திருஅவையும், கருக்கலைப்பு, திருமண மற்றும் குடும்ப வாழ்வில் சிக்கல், ஓரினச் சேரக்கை போன்ற பல சவால்களை மேய்ப்புப்பணியில் சந்தித்து வருகின்றது.

கொலம்பியாவின் பொகோட்டாவுக்கு, அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1968ம் ஆண்டு ஆகஸ்ட் 22 முதல் 25 வரை திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். பின் புனித  திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1986ம் ஆண்டு ஜூன் 1 முதல் 8 வரை, அந்நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 6, இப்புதனன்று, கொலம்பியாவுக்கு திருத்தூதுப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இப்பயணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இருபதாவது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் ஹவானாவில் கொலம்பிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, தற்போது அந்நாட்டில் எடுக்கப்பட்டுவரும் அமைதி மற்றும் ஒப்புரவு முயற்சிகளை ஊக்குவிக்கச் சென்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். முதல் அடி எடுத்து வைப்போம் என்ற தலைப்புடன் நடைபெறும் இத்திருத்தூதுப்பயணத்தில் 12க்கும் மேற்பட்ட உரைகள் ஆற்றுவார் மற்றும், எல்லா தரப்பு மக்களையும் சந்திக்கவுள்ளார் திருத்தந்தை. கொலம்பியாவில் தொடர்ந்து அமைதி நிலவுவதாக.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.