2017-09-06 15:42:00

ஏழை நாடுகளுக்குச் செல்லும் 50,000 டன் தென் கொரிய அரிசி


செப்.06,2017. தென் கொரியாவின் வேளாண்மைத் துறை, தங்கள் நாட்டில் கூடுதலாக விளைந்துள்ள 2 இலட்சம் டன் அரிசியில், 50,000 டன் அரிசியை, தென் சூடான், சோமாலியா, ஏமன், நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள கூடுதல் விவசாயம், மற்றும், மக்களின் உணவுப் பழக்கங்களில் அரிசியின் அளவு குறைவு ஆகிய இரு காரணங்களால், சென்ற ஆண்டு, 3 இலட்சம் டன் அரிசியும், இவ்வாண்டு 2 இலட்சம் டன் அரிசியும் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா. அவையின் ஆதரவோடு, 14 நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கியுள்ள FAC எனப்படும் உணவு உதவி நிறுவனத்தின் வழியாக, இந்த உதவிகள், தேவைப்படும் நாடுகளுக்கு அளிக்கப்படும் என்று, ஆசிய செய்தி கூறியுள்ளது.

FAC எனப்படும் உணவு உதவி நிறுவனத்தில், ஆஸ்திரேலியா, ஜப்பான், கானடா, தென் கொரியா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 14 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.