2017-09-05 14:06:00

பாசமுள்ள பார்வையில் – வானதூதராக வழியனுப்பி வைத்த அன்னை


1979ம் ஆண்டு, அன்னை தெரேசா அவர்களுக்கு நொபெல் அமைதி விருது வழங்கப்பட்ட வேளையில், அவர் வழங்கிய ஏற்புரையில், தன் வாழ்வு அனுபவங்கள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார். அவற்றில் ஒன்று, இதோ:

"வீதியில் கிடந்த ஒருவரை எங்கள் இல்லத்திற்குக் கொணர்ந்தபோது, அவர் சொன்னதை நான் ஒருநாளும் மறக்கப்போவதில்லை. அவரது உடல் முழுவதும், காயங்களால் நிறைந்து, புழுக்கள் மண்டிக்கிடந்தது. முகம் மட்டுமே புழுக்களின் தாக்குதலிலிருந்து தப்பித்திருந்தது. அந்நிலையில் இருந்த அவர், எங்கள் இல்லத்திற்கு வந்து சேர்ந்ததும், 'நான் இதுவரை வீதியில் ஒரு மிருகத்தைவிட கேவலமாகக் கிடந்தேன். இப்போது, ஒரு வானதூதரைப்போல் இறக்கப்போகிறேன்' என்று சொன்னார். சில நாள்கள் சென்று, அவர் இறைவன் இல்லத்தில் வாழச் சென்றார். ஆம், மரணம் என்பது, இறைவனின் இல்லம் செல்வதுதானே!"

மனிதர்கள் என்றுகூட மதிக்க இயலாதவாறு உருக்குலைந்திருந்தோரை, வானதூதர்களாக மாற்றி, வழியனுப்பி வைத்த அன்னை தெரேசா, 20 ஆண்டுகளுக்கு முன், 1997ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி இறைவனின் இல்லம் சென்றார். கொல்கத்தா வீதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு, அன்னையின் இல்லத்தில் சில நாள்கள் தங்கியபின், வானதூதர்களாக இறைவனின் இல்லம் சென்றிருந்த பலர், அன்னையை வரவேற்க அங்கு காத்திருந்தனர் என்று உறுதியாகக் கூறலாம்.

அன்னை தெரேசா அவர்கள் இறையடி சேர்ந்த செப்டம்பர் 5ம் தேதியை,  அகில உலக பிறரன்பு நாள் என ஐ.நா.அவை அறிவித்துள்ளது. 2013ம் ஆண்டு முதல் இந்த உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.