2017-09-05 15:06:00

நம்பிக்கையிழந்த மக்களுக்கு அன்னை தெரேசா போன்று...


செப்.05,2017. “மனத்தளர்ச்சியடைந்தோர், மற்றும், புரிந்துகொள்தலும், கனிவும் தேவைப்படுவோர் ஆகியோருக்கு, அன்னை தெரேசா போன்று, மகிழ்வு மற்றும் நம்பிக்கையின் வாய்ப்புக்களைத் திறந்துவிடுவோமாக” என, இச்செவ்வாயன்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 5, இச்செவ்வாயன்று, புனித அன்னை தெரேசா அவர்களின் திருநாள் சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியில், புனித அன்னை தெரேசா அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், புனித அன்னை தெரேசா அவர்கள், இறையடி சேர்ந்ததன் இருபதாம் ஆண்டு நிறைவு நாளான இச்செவ்வாய் காலையில், கொல்கத்தா புனித அன்னை தெரேசா அருள்சகோதரிகள் இல்லத்தில், விழா திருப்பலி நிறைவேற்றினார், இந்திய திருப்பீடத் தூதர், பேராயர் ஜாம்பத்திஸ்தா திகுவாத்ரோ.

இன்னும், புனித அன்னை தெரேசா அவர்களை, கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் இணை பாதுகாவலராக அறிவிக்கவிருப்பதாக, அவ்வுயர்மறைமாவட்டத்தின் பேராயர் தாமஸ் டிசூசா அவர்கள் கூறியுள்ளார்.

செப்டம்பர் 6, இப்புதன் மாலை 5.30 மணிக்கு, கொல்கத்தா செபமாலை அன்னை பேராலயத்தில் நிறைவேற்றப்படும் திருப்பலியில், பேராயர் திகுவாத்ரோ அவர்கள், புனித அன்னை தெரேசாவை, கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் இணை பாதுகாவலராக அறிவிப்பார் எனக் கூறினார், பேராயர் டி சூசா.

இந்நிகழ்வு குறித்து, IANS செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் டி சூசா அவர்கள், ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் ஒரு பாதுகாவலர் உள்ளார், இவ்வழியில், புனித பிரான்சிஸ் சவேரியார், கொல்கத்தா உயர்மறைமாவட்டத்தின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார், தற்போது, புனித அன்னை தெரேசா அவர்களை, இணை பாதுகாவலராக அறிவிக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.

கொல்கத்தா போன்ற நகருக்கும், கொல்கத்தா உயர்மறைமாவட்டத்திற்கும் புனித அன்னை தெரேசா அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர், அவரின் பரிந்துரையை இறைஞ்சுவதற்கு விரும்புகின்றோம் என்று, மேலும் கூறினார், பேராயர் தாமஸ் டிசூசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.