2017-09-04 16:34:00

சிலுவையின்றி இயேசுவைப் பின்தொடர சோதனைகள்


செப்.04,2017. இயேசுவை சரியான பாதையில் சென்று அடைவதற்கு பதிலாக, அவரின் சிலுவையை ஒதுக்கிவிட்டு அவரைப் பின்தொடர்வதற்குரிய சோதனைகளே எப்போதும் உள்ளன என, ஞாயிறு மூவேளை செப உரையில் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் துன்பங்களை அனுபவித்து மரணமடைய உள்ளது குறித்து இயேசு அறிவித்ததையும், அதற்கு தூய பேதுரு மறுப்புத் தெரிவித்து, இயேசுவின் கோபத்திற்கு உள்ளானது குறித்தும் எடுத்துரைக்கும் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மேற்கோள்காட்டி தன் நண்பகல் மூவேளை செப உரையை, உரோம் நகரின் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் சிலுவையை சுமக்காமல் அவரைப் பின்செல்ல முடியாது என்றார். இயேசுவின் பாதை அன்பின் பாதை, தன்னையே தியாகம் செய்ய முன்வராத இடத்தில் உண்மை அன்பு இருக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்புகிறவர் எவரும், அதை இழந்துவிடுவர், மாறாக, இயேசுவின் பொருட்டு அதை அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவர் என இயேசு கூறியது, அனைவருக்கும் ஒரு பொன்மொழி எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னையே பலியாக்கிய இயேசுவின் அன்பை, உணவாகவும் பானமாகவும் தரும் திருப்பலியில், அவரின் தியாக அன்பை நாம் முற்றிலுமாக காண்கிறோம் என மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.