2017-09-04 16:37:00

குற்றக் கும்பல்களின் பிடியில் குடியேற்றதாரர்


செப்.04,2017. இக்கால குடிபெயர்வுகளில் நவீன அடிமைத்தனம் புகுந்து, நிலைமையை சீர்கேடுடையதாக மாற்றியுள்ளதாக, வியன்னாவின் ஐ.நா. கூட்டத்தில் திருப்பீடத்தின் கவலையை வெளியிட்டார், திருப்பீட அதிகாரி, அருள்பணி Michael Czerny.

திருப்பீடத்தின் சார்பில் இத்திங்களன்று வியன்னா கூட்டத்தில் உரையாற்றிய, ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்குரிய திருப்பீட அவையின் நேரடிச் செயலர் அருள்பணி Czerny அவர்கள், பாதுகாப்பான, ஒழுங்குமுறையுடன் கூடிய குடியேற்றம் குறித்து நாம் விவாதிக்கும்போது, இன்றைய குடியேற்றதாரர்கள் அனுபவித்துவரும் அடிமை முறைகள் குறித்தும், அவர்கள் வியாபாரப்பொருட்கள் போல் விற்கப்படுவது குறித்தும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்றார்.

பாதுகாப்பான வாழ்வையும் சிறந்த வாய்ப்புக்களையும் தேடி வேறு நாடுகளுக்கு குடிபெயரும் மக்களிடையே குற்றக் கும்பல்கள் புகுந்து, அவர்களை வியாபாரப் பொருட்களாக மாற்றும் நிலைகள் அதிகரித்து வருகின்றன என உரைத்த அருள்பணி  Czerny அவர்கள்,  உரிமை மீறலுக்கும், சுரண்டலுக்கும் குடியேற்றதாரர்கள் உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகின்றது என்றார்.

ஏழ்மையை நீக்குதல், வேலைவாய்ப்புகள், கல்வியறிவூட்டுதல், பெண்களுக்கு உரிமை வழங்குதல் போன்றவை குறித்தும் தன் உரையில் வலியுறுத்திப் பேசினார், அருள்பணி  Czerny.

2016ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, வியாபாரப் பொருட்களாக கடத்தப்படும் மனிதர்களுள், 51 விழுக்காட்டினர் பெண்கள் என்றும், 21 விழுக்காட்டினர் ஆண்கள், 20 விழுக்காட்டினர் சிறுமிகள் மற்றும் 8 விழுக்காட்டினர் சிறுவர்கள் என்றும், தன் உரையில் சுட்டிக்காட்டினார் அருள்பணி Czerny.

இன்றைய உலகில், கட்டாய தொழில்முறை, கடன்சுமையால் அடிமையாதல், மனிதர்கள் வியாபாரப் பொருட்களாக நடத்தப்பட்டு கடத்தப்படல் போன்றவற்றால் 2 கோடியே 10 இலட்சம் முதல் 4 கோடியே 60 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அருள்பணி  Czerny அவர்கள், திருஅவையின் கவலையை வெளிப்படுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.