2017-09-01 16:02:00

செப்டம்பர் 1, படைப்பின் பாதுகாப்பு உலக செப நாள்


செப்.01,2017. செப்டம்பர் 1, இவ்வெள்ளியன்று, கத்தோலிக்கத் திருஅவையும், கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையும் மூன்றாவது முறையாக இணைந்து, படைப்பின் பாதுகாப்பிற்கென உருவாக்கப்பட்டுள்ள உலக செப நாளைக் கடைபிடிக்கும் வேளையில், இவ்விரு சபைகளின் தலைவர்களும், முதல் முறையாக, இணைந்த செய்தியொன்றை வெளியிட்டுள்ளனர் என்று, திருப்பீடச் செய்தித்தொடர்பகம் கூறியது.

படைப்பைப் பாதுகாப்பதற்கென அனைத்து நல்மனம் கொண்டோரும் இணைந்து செபிக்க வேண்டும் என்றும், எளிமையான, பொறுப்பான வாழ்வு முறையைக் கடைபிடிப்பதால், படைப்பைக் காக்கும் வழிகளை எளிதாக்கமுடியும் என்றும் இச்செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகெங்கும் உள்ள கத்தோலிக்க ஆர்த்தடாக்ஸ் கோவில்களிலும், துறவு இல்லங்களிலும், இன்னும் ஏனைய நிறுவனங்களிலும், இந்த செப நாளை சிறப்பான முறையில் கடைபிடிக்குமாறு, இவ்விரு சபைகளின் தலைவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

செப்டம்பர் 1, இவ்வெள்ளி காலை, உரோம் நகரில் உள்ளூர் நேரம் 8 மணிக்கும், அதற்கு இணையாக, துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கும் இச்செய்தி, ஏழு மொழிகளில் வெளியிடப்பட்டதென திருப்பீடச் செய்தித்தொடர்பகம் கூறியது.

மேலும், "படைப்பின் அழகை ஆழ்ந்து தியானிப்பதால், எங்களுக்குள், நன்றி உணர்வையும், பொறுப்பையும் தூண்டுமாறு, ஆண்டவரே, எங்களுக்கு கற்றுத்தாரும்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 1, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.