2017-08-31 15:33:00

பாசமுள்ள பார்வையில்.. மாமியாரின் நல்லெண்ணம்


கலாவுக்கு கோபம் கோபமாய் வந்தது. வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு இருக்கும் நான், மாங்கு மாங்கு என்று எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்து கொண்டிருக்கிறேன். என் மாமியார் பக்கத்து வீட்டில் உட்கார்ந்து வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறாரே? ச்சே.. ச்சே.. என்ன பெண் இவங்க?... மருமகள் மீது கொஞ்சம் கூடவா ஈவு இரக்கம் இல்லாமல் போய்விடும்? என மனதிற்குள்ளே மாமியாரை நினைத்து நொந்துகொண்டிருந்தார் கலா. அன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவரிடம், “என்னங்க... நான் உங்க வீட்டு முதல் வாரிசை சுமக்கிறேன். ஆனா, அதை உங்க அம்மா உணர்ந்த மாதிரி தெரியலையே? என்னை ஒரு வேலைக்காரியா நினைச்சு வேலை வாங்கிட்டு இருக்காங்க. என்னால முடியலைங்க. நீங்களாவது உங்க அம்மாகிட்ட என் நிலைமையை பத்தி பேசக்கூடாதா?” என்று சொன்னார் கலா. மனைவி  சொல்வதைக் கேட்டு கொதித்து போன கணவர், “கவலைப்படாதே, நிச்சயம் அம்மாவிடம் இதுபற்றி கேட்பேன்”என்று ஆறுதல் கூறினார். அந்த நேரத்தில், பக்கத்து வீட்டு கமலா அக்காவிடம் மாமியார் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டார் கலா. “கடவுள் புண்ணியத்துல... என் மருமகள் கலாவுக்கு சுகப்பிரசவம் நடந்தா, வேளாங்கண்ணிக்கு நான் நடைப்பயணமா வர்றதா வேண்டிக்கிட்டு இருக்கேன். அவளுக்கு சுகபிரசவம் நடக்கணும்னு நான் எந்த வேலையையும் செய்யாம அவளையே எல்லா வேலையையும் செய்யச் சொல்றேன். நல்லா வேலை செஞ்சாதானே சுகப்பிரசவம் நடக்கும்? நல்லபடியா அவளுக்கு சுகபிரசவம் ஆயிட்டா அதுக்கு அப்புறம் என் மருமகளை ஒரு வேலையும் செய்யவிடாம, என் உள்ளங்கையில் வைச்சு தாங்குவேன். இப்ப அவளை நான் இப்படி வேலை வாங்கறேன்னு அவளுக்கு என் மேல கண்டிப்பா கோபம் இருக்கும். இருந்துட்டு போகட்டும். நல்லது நடந்தா சரி!” என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அதை ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்த கலாவின் கண்கள் குளமாயின!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.