2017-08-31 16:07:00

கொலம்பியாவில் "அமைதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாரம்"


ஆக.31,2017. கடந்த 30 ஆண்டுகளாக, கொலம்பியா நாட்டில் நடைபெற்றுவரும் "அமைதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாரம்" என்ற முயற்சி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயண வாரத்துடன் இணைந்து நிகழ்வது, மிகப் பொருத்தமாக உள்ளது என்று, கொலம்பிய ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஆஸ்கர் உர்பீனா ஒர்தேகா அவர்கள் கூறினார்.

கொலம்பியாவில் அமைதி திரும்பவேண்டும் என்ற நோக்கத்துடன், 1987ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட "அமைதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாரம்" செப்டம்பர் 3ம் தேதி முதல், 10ம் தேதி முடிய நிகழும் வேளையில், திருத்தந்தை தங்கள் நாட்டிற்கு வருகை தருவது, இறைவன் தந்த அருள் என்று, பேராயர் ஒர்தேகா அவர்கள் எடுத்துரைத்தார்.

செப்டம்பர் மாதம் மேற்கொள்ளவிருக்கும் அமைதி வாரத்தில், கொலம்பியா நாடெங்கும் 1000த்திற்கும் அதிகமான இடங்களில் அமைதியை மையப்படுத்திய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு புத்தாண்டு நாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட அமைதி நாள் செய்தியினால் தூண்டப்பட்டு, "அமைதி மற்றும் ஒப்புரவுக்கு பல படிகள்" என்பது, இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் அமைதி வாரத்தின் மையக்கருத்தாக தெரிவு செய்யப்பட்டுள்ளது என்று, கொலம்பிய ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.