2017-08-31 16:20:00

உரோம் பல்கலைக்கழகங்களில் சுற்றுச்சூழல் பட்டயப்படிப்பு


ஆக.31,2017. படைப்பையும், சுற்றுச்சூழலையும் மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'இறைவா உமக்கேப் புகழ்' என்ற திருமடலை அடிப்படையாகக் கொண்டு, உரோம் நகரில் இயங்கிவரும் பாப்பிறை பல்கலைக்கழகங்கள் இணைந்து, பட்டயப்படிப்பு ஒன்றை அறிவித்துள்ளன.

இந்தியாவின் இராஞ்சி பேராயர் கர்தினால் டெலெஸ்ஃபோர் டோப்போ அவர்களும், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழக பேராசிரியர் இயேசுசபை அருள்பணி பிரேம் கால்கோ அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து இந்தப் பட்டயப்படிப்பு குறித்து பேசினர்.

ஆறு பிரிவுகளாக அமைந்துள்ள திருத்தந்தையின் திருமடல், ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் பேராசியர்களால் ஒருங்கிணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு முதல் துவங்கும் இந்தப் பட்டயப்படிப்பு திட்டத்தில், கிரிகோரியன், சலேசியன், உர்பானியன் மற்றும் ஏனைய பாப்பிறை பல்கலைக்கழகங்கள் இணைந்து செயலாற்றும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.