2017-08-30 16:28:00

மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது


ஆக.30,2017. 2017-ம் ஆண்டு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில், இராஜீவ் காந்தி கேல் இரத்னா, அர்ஜுனா, துரோணாச்சாரியார், தயான் சந்த் விருதுகள் வழங்கும் விழா, தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29, இச்செவ்வாயன்று, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.

2004-ம் ஆண்டு ஏதன்ஸ் நகரிலும், 2016-ம் ஆண்டு ரியோ நகரிலும் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தங்கப் பதக்கமும், உலக சாதனையும் படைத்த ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திரா ஜஜ்ஜாரியாவுக்கு (Devendra Jhajharia) ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்கினார்.

இதன்மூலம் நாட்டின் உயரிய இந்த விருதை பெற்ற முதல் மாற்றுத்திறனாளி வீரர் என்ற பெருமையையும் தேவேந்திரா ஜஜ்ஜாரியா பெற்றார்.

தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பன், திருச்சியை சேர்ந்த தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ், போளூரை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் அந்தோணி அமல் ராஜ் உள்ளிட்ட 17 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தார்.

இவர்களில், மாரியப்பன், கடந்த ஆண்டு நடைபெற்ற ரியோ மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றிருந்தார். கடந்த சனவரி மாதம் இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டிருந்தது.

ஆரோக்கிய ராஜீவ், கடந்த மாதம் புவனேஷ்வரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டிகளில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். இவர், கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியின் 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதுடன் ரூ.7.5 லட்சம் பரிசுத் தொகையும், அர்ஜுனா, துரோணாச்சாரியார், தயான் சந்த் விருதுகளுடன் ரூ.5 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.