2017-08-29 15:46:00

புனித அகுஸ்தினின் தாழ்ச்சியிலிருந்து கற்றுக்கொள்வோம்


ஆக.,29,2017. நம்மை வெறுமனே கவனித்துக்கொண்டு, தன்னை மூடியிருக்கும் கடவுளாக இல்லாமல், நமக்காக கதவுகளைத் திறந்துவிடும் நல்லாயனாக இருக்கும் கிறிஸ்துவை பின்பற்றி, நாமும் ஏழைகளின் தேவையறிந்து உதவவேண்டும் என அழைப்பு விடுத்தார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

திருஅவையில் இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட புனித அகுஸ்தினின் திருவிழாவை முன்னிட்டு, அப்புனிதரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இத்தாலியின் பவியா எனுமிடத்தில் அமைந்துள்ள பசிலிக்காவில், இத்திங்களன்று மாலை திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

அதிகார மோகத்திலிருந்து விடுபடவும், ஏழைகளுக்கு உதவுவதை வாழ்வு முறையாகக் கொள்ளவும், புனித அகுஸ்தினின் தாழ்ச்சி நமக்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும் என்று தன் மறையுரையில் குறிப்பிட்டார், கர்தினால் பரோலின்.

ஒவ்வொரு கிறிஸ்தவரும் எந்த ஒரு சூழலிலும், எந்த ஓர் இடத்திலும், சான்று பகர்பவர்களாக செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் கர்தினால் பரோலின்.

இயற்கை வளங்கள் காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறிய திருப்பீடச் செயலர், மனிதர்களின் சுயநலன்களால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும் கவலையை வெளியிட்டார்.

மனிதனின் மாண்பு காக்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு, வேலை செய்வதற்கான மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் தன் மறையுரையில் எடுத்துரைத்தார், கர்தினால் பரோலின்.

மறைந்த திருத்தந்தை முதலாம் ஜான் பால் அவர்கள் பரிந்துரையால் புதுமை ஒன்று இடம்பெறும் பட்சத்தில், அவரை புனிதராக அறிவிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமிருப்பதாகவும் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், அவரை புனிதராக அறிவிப்பதற்கான ஆய்வுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும் கூறினார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.