2017-08-29 15:45:00

அமெரிக்க ஹார்வி புயலால் பாதிக்கப்பட்டோரிடையே திருஅவை


ஆக.,29,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டில் அண்மையில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய ஹார்வி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவித்து அவர்களுக்காக செபிக்கவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர்.

மக்களின் உயிர்களை பறித்துள்ளதுடன், பலரை காயப்படுத்தியுள்ள இப்புயலால் எண்ணற்ற பொருள்சேதங்களும் ஏற்பட்டுள்ளன என்ற கவலையை வெளியிட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் டேனியல் டிநார்டோ அவர்கள், நல்மனம் கொண்டோர் அனைவரும், இப்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இப்பேரிடரின்போது, தாங்களே முன்வந்து உதவிகளை ஆற்றும் தனிநபர்களையும், அமைப்புகளையும் தான் வெகுவாகப் பாராட்டுவதாகத் தெரிவித்த கர்தினால் டிநார்டோ அவர்கள், பாதிக்கப்பட்டோர், மற்றும், அவர்களுக்கு உதவுவோர் அனைவரையும் கருணையின் இறைவன் காப்பாராக என தன் செய்தியில் கூறியுள்ளார்.

அமெரிக்க ஆயர் பேரவை, தன் பல்வேறு அமைப்புக்கள் வழியாக உதவிகளை ஆற்றி வருவதுடன், வருங்காலத் திட்டங்களையும் தீட்டிவருகிறது என மேலும் கூறியுள்ளார், அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் டிநார்டோ.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.