2017-08-26 13:46:00

முடிசூட்டிய அரசி நம்முடன் இணைந்து நடந்து வருகிறார்


ஆக.,26,2017. போலந்தின் செஸ்டகோவா மரியன்னை திருவிழாவை முன்னிட்டு, அத்திருத்தலத்தில் கூடியிருக்கும் திருப்பயணிகள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்டு, செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு, செஸ்டகோவா மரியன்னை திருவிழாவுடன் இணைந்து, செஸ்டகோவாவின் யஸ்ன கோரா மரியன்னை திரு உருவத்திற்கு, திருத்தந்தையின் அங்கீகாரத்துடன் மணிமகுடம் சூட்டப்பட்டதன் 300ம் ஆண்டும் சிறப்பிக்கப்படுவதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போலந்தின் இதயமாக செஸ்டகோவா இருப்பது என்பது, போலந்து நாடு ஒரு தாய்மைக்குரிய இதயத்தைக் கொண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

போலந்து நாடு திருமுழுக்குப் பெற்றதன் 1050ம் ஆண்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள, தான் அங்கு வந்ததை இன்றும் பசுமையுடன் நினைவுகூர்வதாக தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, முடிசூட்டப்பட்ட அரசியாகிய யஸ்ன கோரா அன்னைமரியா, தூரத்தில் வாழும் ஓர் அரசி அல்ல, மாறாக, மக்களோடு உடன் நடந்து வழி நடத்தும் ஒரு தாய் என மேலும் அதில் கூறியுள்ளார்.

யஸ்ன கோரா அன்னை முடிசூட்டப்பட்டதன் 300ம் ஆண்டை சிறப்பிக்கும் இவ்வேளையில், நாம் அனைவரும் அன்னையின் பாதுகாப்பை உணர்ந்து, நாம் எவரும் அனாதைகள் அல்ல என்பதை காட்டவேண்டும் எனவும், போலந்து மக்களுக்கான திருத்தந்தையின் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.