2017-08-25 15:32:00

கட்டக்- புபனேஸ்வர் பேராயர் : கந்தமால் நினைவு நாள்


ஆக.25,2017. மக்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும், மற்றும், மக்கள் படும் துயரங்களுக்கு முடிவுகள் வரும் என்ற நம்பிக்கையை, கந்தமால் நாள் மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதே என் செபம் என்று, இந்தியாவின் பேராயர் ஒருவர் கூறியுள்ளார்.

2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி, ஒடிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில், இந்து அடிப்படைவாதிகள், கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொண்ட வன்முறைகளின் ஒன்பதாம் ஆண்டு நினைவு, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, கட்டக்- புபனேஸ்வர் உயர்மறைமாவட்டத்தின் பேராயர், ஜான் பார்வா அவர்கள், ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

இந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உச்ச நீதி மன்றத்தின் வழியே தகுந்த இழப்பீடுகள் கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன், 10,000த்திற்கும் அதிகமான மக்கள் கந்தமால் பகுதியில் இவ்வெள்ளியன்று கூடிவந்தனர் என்று, பேராயர் பார்வா அவர்கள் கூறியுள்ளார்.

2008ம் ஆண்டு  ஆகஸ்ட் 23ம் தேதியன்று மாவோயிஸ்ட் குழுக்கள், இந்துமதத் தலைவர் சுவாமி சரஸ்வதி லக்ஷானந்தா (Saraswati Laxanananda) அவர்களை, அவரது ஆசிரமத்தில் கொலை செய்ததாக, அக்குழுக்களே ஒப்புக்கொண்டுள்ளவேளை, இக்கொலைக்கு  கிறிஸ்தவர்களைக் குற்றம்சாட்டிய இந்து தீவிரவாதிகள், கந்தமால் மாவட்டத்தில் ஆகஸ்ட் 25ம் தேதியன்று, கிறிஸ்தவர்களுக்கு எதிராக கடும் வன்முறைத் தாக்குதல்களை நடத்தினர்.

இத்தாக்குதல்களில் ஏறத்தாழ ஐம்பதாயிரம் கிறிஸ்தவர்கள் புலம்பெயர்ந்தனர். கிறிஸ்தவர்களின் 5,600 வீடுகளும் 415 கிராமங்களும் சூறையாடப்பட்டன. ஏறத்தாழ 300 ஆலயங்களும், இன்னும், அருள்சகோதரிகளின் இல்லங்கள், பள்ளிகள், மாணவர் தங்கும் விடுதிகள், மற்றும் ஏனைய நலவாழ்வு அமைப்புகளும் சேதமாக்கப்பட்டன. 90க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகினர்.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.