2017-08-24 14:56:00

"வாழும் ஒரு திருஅவைக்கு, வாழும் ஒரு வழிபாடு" - திருத்தந்தை


ஆக.24,2017. மாற்றங்கள் தேவை என்ற உணர்வைப் பெற்றதும், அந்த மாற்றங்களை நோக்கி முயற்சிகளை மேற்கொள்வது முக்கியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த மாநாட்டு உறுப்பினர்களிடம் கூறினார்.

ஆகஸ்ட் 21 இத்திங்கள் முதல், ஆகஸ்ட் 24, இவ்வியாழன் முடிய உரோம் நகரில் நடைபெற்ற 68வது தேசிய திருவழிபாட்டு வாரம் என்ற கூட்டத்தில் கலந்துகொண்ட 800க்கும் அதிகமான உறுப்பினர்களை, இவ்வியாழன் மதியம் வத்திக்கான் அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை, கத்தோலிக்கத் திருஅவையின் திருவழிபாடுகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து பேசினார்.

புனித திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்களின் தூண்டுதலால், திருவழிபாட்டு இசையில் துவங்கிய மாற்றங்கள், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் பரிந்துரைத்த மாற்றங்கள், ஆகியவை, இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வேளையில் இன்னும் தெளிவாக வெளிப்பட்டன என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

கத்தோலிக்கத் திருஅவையின் திருவழிபாடுகளில் துவக்கப்பட்ட மாற்றங்கள், இன்னும் தொடரவேண்டும் என்ற கருத்தை வெளியிட்ட திருத்தந்தை, 68வது திருவழிபாட்டு வாரத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட, "வாழும் ஒரு திருஅவைக்கு, வாழும் ஒரு வழிபாடு" என்ற மையக்கருத்தைக் குறித்த தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

உயிர்த்த கிறிஸ்து வாழ்கிறார் என்பதாலேயே, திருஅவையும், திருவழிபாடும் வாழ்வு பெறுகிறது என்ற கருத்தை முதலில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இந்த வழிபாடுகள் குருக்களை மையப்படுத்தாமல், இறை மக்களை மையப்படுத்தும்போது, இன்னும் அதிகமான உயிர்த்துடிப்பு பெறுகின்றன என்று எடுத்துரைத்தார்.

கத்தோலிக்கத் திருவழிபாடு, ஒரு கருத்தை மையப்படுத்தி நிகழ்வதல்ல, மாறாக, மக்களின் வாழ்வை மையப்படுத்தி நிகழ்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழிபாடு, நமது வாழ்வையும் மாற்றும் சக்தி பெற்றதாக அமையவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.

இத்தாலிய வழிபாட்டு நடவடிக்கை மையமும், தெய்வீகப் போதகரின் சீடர்களான அருள்சகோதரிகள் சபையும் இணைந்து, 68வது வழிபாட்டு வாரம் என்ற கூட்டத்தை உரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்தன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.