2017-08-22 15:37:00

ஹாங்காங் : இளம் ஆர்வலர்களின் கைதுக்கு கர்தினால்கள் கண்டனம்


ஆக.22,2017. ஹாங்காங்கில், சனநாயக ஆதரவுக்காக குரல் கொடுத்துவரும் இளையோர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து, ஆசியாவின் இரு கர்தினால்கள் தங்களின் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

சனநாயகத்திற்கு ஆதரவாக குரல் எழுப்புவதற்கென, 2014ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தின் முன்னாள் மாணவர் தலைவர்களாகிய Alex Chow, Joshua Wong, Nathan Law ஆகிய மூவருக்கும், ஹாங்காங் நீதிமன்றம், ஆகஸ்ட் 17ம் தேதியன்று, ஆறு முதல், எட்டு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறைந்தது ஐம்பதாயிரம் மக்கள் ஹாங்காங்கில் பேரணி ஒன்றை நடத்தியுள்ளவேளை, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ, ஹாங்காங்கின் ஓய்வுபெற்ற கர்தினால் ஜோசப் ஜென் கி-குயின் ஆகிய இருவரும், இந்த அரசியல் கைதுகளுக்கு, தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

அரசியல் கைதுகளை எதிர்த்து இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற பேரணி, 2014ம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கம் உருவாக்கப்பட்டபின் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் என்று செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.