ஆக.22,2017. சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் போதைப்பொருள் விவகாரத்திற்கு எதிராக, பிலிப்பீன்ஸ் அரசு மேற்கொண்டுவரும் வன்செயல்கள் குறித்து சிந்திக்கவும், செபிக்கவும், செயல்படவும் விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார், மணிலா பேராயர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.
பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தர்தே அவர்களின் போதைப்பொருள் குறித்த கடும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்தினால் தாக்லே அவர்கள், போதைப்பொருள் பிரச்சனை, அரசியல் அல்லது குற்றவியல் பிரச்சனையாக நோக்கப்படாமல், எல்லா மக்களையும் பாதிக்கின்ற மனிதாபிமான விவகாரமாக நோக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 15ம் தேதியிலிருந்து, நான்கு நாள்களுக்குள், போதைப்பொருள் தொடர்பாக, பிலிப்பீன்ஸ் நாட்டின் Bulacanல், 32 பேரும், மணிலாவில் 49 பேரும் கொல்லப்பட்டதை, தனது மேய்ப்புப்பணி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் தாக்லே அவர்கள், இவ்விவகாரம் குறித்து அரசு, திருஅவையுடன் கலந்துரையாடலில் ஈடுபடுமாறு விண்ணப்பித்துள்ளார்.
சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் போதைப்பொருள் அச்சுறுத்தல் உண்மையானதாகவும், அழிவை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்றும், இவ்விவகாரத்தை, நாட்டினர் எல்லாரும் இணைந்து கையாளவேண்டுமென்றும் கூறியுள்ள மணிலா கர்தினால், மனித வாழ்வு வீணாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
பிலிப்பீன்சில் துத்தர்தே அவர்களின் நிர்வாகத்தின் கடந்த 14 மாதங்களில், போதைப்பொருள் தொடர்பாக, ஏறத்தாழ எட்டாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |