2017-08-21 16:31:00

உலகின் மோதல்கள் குறித்து விவாதிக்க இரஷ்ய பயணம் உதவும்


ஆக.,21,2017. மனிதர்கள் ஒவ்வொருவரின் மாண்பையும், மீறமுடியாத உரிமைகளையும் உள்ளடக்கிய நீதி மற்றும் அமைதியை மீட்டெடுக்கும் திருஅவைப் பணிகளின் ஒரு பகுதியாக, இரஷ்ய நாட்டில் தன் பயணம் இடம்பெறுவதாக தெரிவித்தார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இரஷ்யாவில் இத்திங்கள் முதல் இடம்பெறும், ஆன்மீக மற்றும் அரசு சார்ந்த பயணம் குறித்து, அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கர்தினால் பரோலின் அவர்கள், இரஷ்ய தலைவர்களுடன் இடம்பெறவுள்ள தன் சந்திப்பின்போது, சிரியா, ஈராக் உள்ளிட்ட மத்திய கிழக்குப் பகுதியின் பிரச்னைகள், உக்ரைன் மோதல்கள் உட்பட பல்வேறு துயர் நிகழ்வுகள் குறித்து, தான் விவாதிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

அடிப்படைவாதத்துடன் கூடிய பயங்கரவாதத்தை எவ்வாறு ஒழிப்பது என கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், பொது நலனை நோக்கிய பல்வேறு நாடுகளின் ஒன்றிணைந்த முயற்சி இதில் தேவைப்படுகிறது எனக் கூறியதுடன், இதில் திருஅவைகளின் முயற்சியும் இணைந்துள்ளது என்றார்.

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்கும், கத்தோலிக்க திருஅவைக்கும் இடையே நிலவும் உறவில், நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வருகின்றது எனவும் கூறினார் கர்தினால் பரோலின்.

தனக்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை முதுபெரும் தந்தை கிறில் அவர்களுக்கும் இடையே இடம்பெற உள்ள சந்திப்பு, பல்வேறு நேர்மறை விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார், கர்தினால் பரோலின்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.