2017-08-19 16:59:00

மன்னிப்பு, இரக்கம், கத்தோலிக்க திருஅவையின் தனித்துவம்


ஆக.19,2017. மன்னிப்பு மற்றும், இரக்கச் செயல்கள், கத்தோலிக்க திருஅவையின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களாக உள்ளன என்றும், இச்செயல்களுக்கு அர்ப்பணமும், பொறுமையும் அவசியம் என்றும், போலந்து பேராயர் ஒருவர் கூறினார்.

மாக்ஸ்மிலியன் கோல்பே நிறுவனம் நடத்திய, Auschwitz வதை முகாமின் 8வது பன்னாட்டு கருத்தரங்கின் இறுதி நாளில் உரையாற்றிய, போலந்து நாட்டின் Gniezno பேராயர், Wojciech Polak அவர்கள், இவ்வாறு கூறினார்.

ஹிட்லரின் நாத்சி கொள்கைகளின்கீழ் உருவாக்கப்பட்ட Auschwitz வதை முகாம் பற்றி, ஜெர்மன் மற்றும் போலந்து ஆயர் பேரவைகள் இணைந்து நடத்திய கருத்தரங்கில் பேசிய பேராயர், Polak அவர்கள், நினைவுகள், அமைதி மற்றும், மன்னிப்பு என்ற தலைப்பில், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஜெர்மனி - போலந்து அமைதி உரையாடல், போலந்து - இரஷ்ய அமைதி உரையாடல், போலந்து – உக்ரைன் அமைதி உரையாடல் போன்றவைகளில் முன்னேற்றம் காணப்படாதது பற்றியும் குறிப்பிட்ட பேராயர், உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை பொறுமையோடு கையாள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இரண்டாம் உலகப்போரின்போது, போலந்து நாட்டுப் பகுதியில் உருவாக்கப்பட்ட Auschwitz வதை முகாம்களில், இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 90 விழுக்காட்டினர் யூதர்கள்.

Auschwitz வதை முகாம், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற கொடூரங்களை நினைவுபடுத்தும் இடங்களில் ஒன்றாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.