2017-08-19 16:52:00

செப்டம்பர் 7, செபம், உண்ணா நோன்பு நாள், பிரேசில் ஆயர்கள்


ஆக.19,2017. பிரேசில் நாட்டின் சுதந்திர தின நாளான வருகிற செப்டம்பர் 7ம் தேதியன்று, செபம் மற்றும் உண்ணா நோன்பை கடைப்பிடிக்குமாறு, அந்நாட்டு ஆயர்கள் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிரேசில் நாடு தற்போது, அரசியலிலும், பொருளாதாரத்திலும், நிர்வாக அமைப்புகளிலும்  எதிர்கொண்டுவரும் இன்னல்நிறைந்த சூழலிலிருந்து விடுதலை அடைவதற்கு, நாட்டின் எல்லா மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், நிறுவனங்கள் என, அனைத்து கத்தோலிக்கரும் செபம் மற்றும் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்து, நாட்டிற்காகச் செபிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர் ஆயர்கள்.

உடன்பிறப்பு உணர்வு அதிகமாகவும், பிரிவினைகள் இல்லாமலும், அரசியலில் ஒளிவுமறைவற்ற நிலை காணப்படவும், விசுவாசிகளும், நல்மனம்கொண்ட எல்லாரும் செபிக்குமாறு, பிரேசில் ஆயர் பேரவை பொதுச் செயலர், ஆயர் Leonardo Steiner அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

போர்த்துக்கீசியரின் மிகப்பெரிய காலனி நாடாகவும், தென் அமெரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் பெரிய நாடாகவும், உலகில் ஐந்தாவது பெரிய நாடாகவும் அமைந்துள்ள பிரேசில், 1822ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதியன்று சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.