2017-08-17 15:20:00

"விண்ணகத் தந்தையின் அன்பிற்கு சாட்சியம் பகர…" - திருத்தந்தை


ஆக.17,2017. "விண்ணகத் தந்தையின் நட்பில் வாழ்வதற்கும், வளர்வதற்கும், அவரது அளவற்ற நன்மைத்தனம், அன்பு இவற்றிற்கு சாட்சியம் பகர்வதற்கும் எதுவும் உங்களைத் தடுக்காமல் இருப்பதாக" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக ஆகஸ்ட் 17, இவ்வியாழனன்று வெளியாயின.

மேலும், பிரேசில் நாட்டின் அபரசீதா (Aparecida) அன்னை மரியா திருத்தலத்தில் நடைபெறும் மூன்றாம் நூற்றாண்டு சிறப்பு கொண்டாட்டங்களில், திருத்தந்தையின் சார்பில் பங்கேற்க, கர்தினால் ஜியோவான்னி பத்திஸ்தா ரே அவர்களை, திருத்தந்தை நியமித்துள்ளார்.

இவ்வாண்டு அக்டோபர் மாதம், 10ம் தேதி முதல், 12ம் தேதி முடிய இத்திருத்தலத்தில் நடைபெறும் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் கர்தினால் பத்திஸ்தா ரே அவர்கள், ஆயர்கள் பேராயத்தின் முன்னாள் தலைவராகவும், இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவையின் தலைவராகவும் பணியாற்றியவர்.

1717ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், பிரேசில் நாட்டின் மூன்று மீனவர்களின் வலையில் சிக்கிய அன்னை மரியாவின் திரு உருவம், புதுமைகள் ஆற்றும் சக்தி பெற்றதென்று கூறப்படுகிறது.

பிரேசில் நாட்டின் பாதுகாவலர் என்று கூறப்படும் அபரசீதா அன்னை மரியாவின் திரு உருவம் கண்டுபிடிக்கப்பட்டதன் 3ம் நூற்றாண்டை, அபரசீதா திருத்தலம் இவ்வாண்டு சிறப்பிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.