ஆக.11,2017. இலங்கையில் முதல் முறையாக குப்பைகளைப் பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்நிலையம் அமைக்கும் நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கொழும்புக்கு அருகில் அமைந்துள்ள வத்தள, கெரவலபிட்டி பகுதியில் அமைக்கப்படவுள்ள இந்த மின்உற்பத்தி நிலையத்திற்கு அரசுத்தலைவர் மைத்ரிபால சிறிசேன அவர்கள், இவ்வியாழக்கிழமை மாலை அடிக்கல் நாட்டினார்.
இதன்படி வத்தள, கெரவலபிட்டி பகுதியில் குப்பைகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இரண்டு மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
தென் கொரிய நிறுவனமொன்றுடன் இணைந்து அமைக்கப்படும் இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களுக்காக, 2,700 கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளது.
இதன் மூலம் 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளதாகவும், இதற்காக நாளொன்றுக்கு, 700 மெட்ரிக் டன் குப்பை பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிக்கல் நாட்டிய பின்னர் கருத்துத் தெரிவித்த அரசுத்தலைவர் சிறிசேன அவர்கள், இத்திட்டத்தின் வழியாக, கொழும்பு நகரில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்குமென்று கூறினார்.
இத்திட்டத்தின் மூலம், சுற்றுச்சூழல் மாசடையாத வகையில், மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுமென்றும், சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |