2017-08-11 14:49:00

துன்பவேளைகளில் இயேசு நம்மோடு இருக்கிறார் என உணர வேண்டும்


ஆக.11,2017. “நம்மை ஏதாவது துன்புறுத்தும்போது, அஞ்சாதே! முன்னோக்கிச் செல்! நான் உன்னோடு இருக்கிறேன்! என, இயேசு நம் இதயங்களில் பேசுவதை உற்றுக்கேட்க வேண்டும்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் ஒன்பது மொழிகளில் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுவரும் திருத்தந்தை, அசிசி புனித கிளாராவின் விழாவாகிய, ஆகஸ்ட் 11, இவ்வெள்ளியன்று வெளியிட்ட செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார்.

அசிசி புனித பிரான்சிஸின் வாழ்வாலும், போதனைகளாலும் ஈர்க்கப்பட்ட புனித கிளாரா, கிறிஸ்தவ ஏழ்மையைப் பின்பற்ற வேண்டுமென்ற ஆவலில், தனது பிரபுத்துவக் குடும்ப வாழ்வைத் துறந்தார்.

தனது 18வது வயதில், ஓர் இரவில், வீட்டைவிட்டு வெளியேறிய இப்புனிதர், ஏழைக் கிளாரா தியான யோக துறவு சபையைத் தொடங்கினார். இவர், நாற்பது ஆண்டுகள் கடுந்தவம் நிறைந்த துறவு வாழ்வை வாழ்ந்து, தனது 59வது வயதில், 1253ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி இறைபதம் அடைந்தார்.   

திருநற்கருணை மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்த இவர், ஒருநாள் இரவில், இவரது துறவு இல்லத்தை சரதேனியக் கொள்ளைக்கூட்டம் சூறையாட முயற்சித்தபோது, திருநற்கருணைப் பாத்திரத்தைக் கையிலேந்தி உருக்கமாகச் செபித்து, அக்கூட்டத்தினரை விரட்டியடித்தார் எனச் சொல்லப்படுகிறது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.