2017-08-10 15:09:00

பாசமுள்ள பார்வையில்:அம்மா என்ற சொல்லுக்கு சாதி மதம் கிடையாது


சென்னையில் முதியோர் காப்பகம் ஒன்றில், கல்யாணி என்ற எழுபது வயது நிரம்பிய ஓர் அம்மாவைச் சேர்த்துவிட்டு மேலாளர் அறைக்குச் சென்றார் ராஜா முகமது இக்பால். கல்யாணி அம்மாவின் குடும்ப விபரங்களை ராஜா சொல்லச் சொல்ல எழுதிய மேலாளர், வியப்புடன், அப்ப நீங்க யாரு... உறவினரா, நண்பரா? என்று கேட்டார். சொல்றேன் சார், இரண்டுமே இல்லை. ஏறக்குறைய பதினைந்து நாள்களுக்குமுன், சென்னையில், நானும் என் மனைவியும், என் அம்மாவுடன் கடைத் தெருவுக்குச் சென்றோம். கார் கதவைத் திறந்து, என் அம்மா இரண்டடிதான் வைத்திருப்பார்கள். அப்போது அவர்களை நோக்கி ஒரு பைக் சீறிட்டு வந்தது. நான் பதறிப் போய் உறைந்து நின்றேன். அப்போது அந்த வழியாக வந்த இளைஞன் ஒருவன், மின்னல் வேகத்தில் பாய்ந்து, என் அம்மாவைப் பின்னால் தள்ளிவிட்டான். பைக் வந்த வேகத்தில் போய்விட்டது. என் அம்மா நன்றாக இருப்பது தெரிந்ததும்தான், அந்த இளைஞனைப் பற்றிய நினைவே எனக்கு வந்தது. அவனைப் போய் பாருடான்னு என் அம்மா பதறினாங்க. அந்த இளைஞன், சாலையில் மயங்கிக் கிடந்தான். அங்கு கிடந்த கூரான கல் ஒன்று, இளைஞனின் பின்புற மண்டையில் குத்தினதில், இரத்தம் ஏராளமாக வெளியேறியிருந்தது. அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தோம். இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்தான். மெதுவாக, திக்கித் திக்கி அவனைப் பற்றி சொன்னான். பெயர் சுந்தரேசன். அப்பா பஞ்சாபகேச அய்யர். அம்மா கல்யாணி. இரண்டு பேரும் காரைக்கால் அருகிலே நிரவியிலே இருக்கிறார்கள். குடும்பத்தில் ரொம்ப கஷ்டம். எனக்கும், இங்கே சுமாரான வேலைதான். அந்த வேலையும் போய், இப்போது வேறு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன் என்றான். அவனை நன்றாகக் கவனிக்கும்படி மருத்துவரிடம் சொல்லி, மருத்துவ செலவுக்குப் பணத்தைக் கட்டிவிட்டு வீட்டுக்கு வந்தேன். ஆனால் அவன் அன்று இரவே இறந்துவிட்டான். உடனே என் அம்மா புலம்பிக்கொண்டே, அவங்க ஊருக்குப் போய், அவங்க அப்பா, அம்மாவை கையோட கூட்டிவந்து, பிள்ளைக்குச் செய்யவேண்டிய சடங்குகளை செய்ய ஏற்பாடு பண்ணுன்னு' என்னை விரட்டினார்கள். நானும் உடனடியாக வாகனத்தில் சென்று காலையில் அவன் ஊர் போய்ச் சேர்ந்தேன். ஆனால் அங்கே சுந்தரேசனின் அப்பாவும் இறந்திருந்தார். சுந்தரேசனின் வருகைக்காக ஊரார் காத்திருந்தனர். அங்கே இருந்த வறுமை சூழ்நிலை, என் மனதை மிகவும் பாதித்தது. அதனால் மகன் இறந்ததை, அவன் அம்மாவிடம் சொல்லாமல், அவன் அப்பாவுக்குச் செய்ய வேண்டிய காரியங்களுக்கு  நானே பணம் கொடுத்து செய்யச் சொன்னேன். அவன் வேலை விடயமாக, வடநாடு போயிருக்கிறான் எனப் பொய் சொல்லி, அவன் அம்மாவையும் கையோட கூட்டிவந்து, இங்கு சேர்த்துள்ளேன், இந்த என் அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் முஸ்லிம். சுந்தரேசன் பிராமின், உலகத்தில் அம்மா என்ற சொல்லுக்கு சாதி, மதம், இனம் கிடையாது. அதற்கு ஒரே அர்த்தம் அன்புதான் சார் என்று கூறி முடித்தான் ராஜா இக்பால். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.