2017-08-10 15:47:00

கர்தினால் பரோலின் மேற்கொள்ளவிருக்கும் இரஷ்ய பயணம்


ஆக.10,2017. இரஷ்ய நாட்டில் தான் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின் முதன்மை நோக்கம் அமைதி என்றும், இதுவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதன்மை நோக்கமாகவும் உள்ளது என்றும் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஓர் இத்தாலிய செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 24ம் தேதி முடிய, கர்தினால் பரோலின் அவர்கள் இரஷ்யாவில் மேற்கொள்ளவிருக்கும் பயணம் குறித்து, Corriere della Sera என்ற நாளிதழுக்கு அளித்த பேட்டி, ஆகஸ்ட் 9, இப்புதனன்று மாலை வெளியானது.

இரஷ்ய அரசுத் தலைவர் மற்றும் உயர் அரசு அதிகாரிகளுடன் தான் மேற்கொள்ளப் போகும் சந்திப்புக்கள் குறித்தும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் அதிகாரிகளுடன் கிறிஸ்தவ ஒன்றிப்பு குறித்து மேற்கொள்ளவிருக்கும் சந்திப்புக்கள் குறித்தும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு நாடுகள், சிரியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் நிலவிவரும் வன்முறைகளை முடிவுக்குக் கொணரும் வழிகளைப்பற்றி தன் பயணத்தின்போது விவாதிக்கவிருப்பதாக கர்தினால் பரோலின் அவர்கள் தெளிவுபடுத்தினார்.

இரஷ்ய நாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூது பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் குறித்து பேசுவதும், தன் பயணத்தின் ஒரு முக்கிய நோக்கம் என்று, கர்தினால் பரோலின் அவர்கள், இப்பேட்டியின் இறுதியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.