2017-08-09 15:34:00

மறைக்கல்வி உரை : இறைமன்னிப்பு, நம்பிக்கையின் உந்துசக்தி


ஆக.09,2017. உரோமையில் இந்நாள்களில் கோடையின் தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது. இப்புதன் காலையில் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் ஆயிரக்கணக்கான பன்னாட்டுப் பயணிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்  புதன் பொது மறைக்கல்வி உரையைக் கேட்பதற்கு கூடியிருந்தனர். பாவியான ஒரு பெண் நறுமணத் தைலம் பூசுதல் என்ற நற்செய்திப் பகுதி, லூக்கா நற்செய்திலிருந்து முதலில் வாசிக்கப்பட்டது (லூக்.7:44,47-50). “இயேசு அப்பெண்ணின் பக்கம் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என்றார். பின்பு அப்பெண்ணைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன”என்றார். “பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அப்பெண்ணை நோக்கி, “உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க”என்றார்”.

பரிசேயரான சீமோனின் வீட்டில், இயேசு உணவருந்தச் சென்றபோது அங்கிருந்தவர்கள், “பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?” என்று கேட்டதை இந்த நற்செய்திப் பகுதியில் வாசிக்கக் கேட்டோம் என, இத்தாலியத்தில் முதலில் உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவ நம்பிக்கை என்ற நம் மறைக்கல்வித் தொடரில், இறைவனின் இரக்கம், கிறிஸ்தவ நம்பிக்கைக்கு உந்து சக்தியாக உள்ளது என்பது பற்றி இன்று நோக்குவோம். இயேசு, பாவியான பெண்ணை மன்னித்தபோது, அவருடைய செயல் துர்மாதிரிகைக்குக் காரணமாக அமைந்திருந்தது. ஏனென்றால், இச்செயல், அக்காலத்திய ஆதிக்கவர்க்கத்தின் எண்ணத்தைப் புரட்டிப்போடுவதாக இருந்தது. இயேசு, பாவிகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, தீண்டத்தகாதவர்களாக, சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக இருந்த அவர்களை அரவணைக்கிறார். இயேசுவில் ஊற்றெடுத்த கருணையே, அவர் உள்ளத்தின் ஆழத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி, இறைவனின் இரக்கமுள்ள இதயத்தை வெளிப்படுத்தியது. நம்பிக்கையிழந்த சூழல்களில் வாழ்வோருக்கும், வாழ்வில் பல தவறுகளை இழைத்தவர்களுக்கும்கூட, இயேசுவின் இந்த வியத்தகு மனப்பான்மை, நம்பிக்கைக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றது மற்றும், இது கிறிஸ்தவத் தனித்துவத்தையும் குறித்து நிற்கின்றது. இறைவனின் மன்னிப்பை அனுபவித்துள்ள நாம், இறைவனின் இந்த இரக்கம், கிறிஸ்துவின் சிலுவை மரணம் என்ற மாபெரும் விலையால் வாங்கப்பட்டது என்பதை மறக்கும் ஆபத்தைத் தவிர்க்க வேண்டும். நம் ஆண்டவர், நோயுற்றோரைக் குணமாக்கினார் என்பதற்காக அல்ல, மாறாக, இறைவனால் மட்டுமே ஆற்றக்கூடியதாக இருந்த, பாவங்களை மன்னிக்கும் பண்பை வெளிப்படுத்தியதற்காக இறந்தார். இந்த இறை இரக்கம், நம்மையும், நம் நம்பிக்கையையும் மாற்றம் பெறச் செய்கின்றது. எவரையும் புறக்கணிக்காத நம் ஆண்டவர், உலகுக்கு அவரின் இரக்கத்தைப் பறைசாற்றும் பணியை நமக்கு அருளுகிறார்.  இவ்வாறு,  “இறைமன்னிப்பு : நம்பிக்கையின் உந்துசக்தி” என்ற தலைப்பில், தன் புதன் மறைக்கல்வி உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணிகள் அனைவரும், சொந்த இல்லங்களிலும், சமூகங்களிலும், இறை இரக்கம், மற்றும், கிறிஸ்தவ நம்பிக்கையின் அடையாளங்களாக வாழ்வதற்கு ஆண்டவர் இயேசுவிடம் தான் செபிப்பதாகக் கூறினார். பின்னர், இஞ்ஞாயிறன்று, நைஜீரியாவில் ஓர் ஆலயத்திற்குள் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது மற்றும், இப்புதன் காலையில், மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறைகள் குறித்து, தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்தார். அனைத்துவிதமான காழ்ப்புணர்வுகளும், வன்முறையும் நிறுத்தப்பட்டு, வெட்கத்துக்குரிய இந்தக் குற்றங்கள், குறிப்பாக, விசுவாசிகள் செபிக்கக் கூடியிருக்கும் வழிபாட்டுத்தலங்களில் நடத்தப்படும் குற்றங்கள், மீண்டும் இடம்பெறாமல் இருக்குமாறு அழைப்பு விடுத்து, திருப்பயணிகளோடு சேர்ந்து அருள்நிறைந்த மரியே வாழ்க என்ற செபத்தை செபித்தார். இறுதியில் எல்லாருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் .    

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.