2017-08-08 15:28:00

சமூக ஊடகங்களை ஞானத்தோடு பயன்படுத்த ஆசிய இளையோர் உறுதி


ஆக.08,2017. இந்தோனேசியாவின் யோக்யகார்த்தாவில் நடைபெற்ற 7வது ஆசிய இளையோர் நாளில் கலந்துகொண்ட இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆசிய இளையோர், சமூக ஊடகங்களை ஞானத்தோடு பயன்படுத்த உறுதியளித்தனர் என, UCA செய்தி கூறுகின்றது.

பிறருக்கு நல்தூண்டுதல்களை ஏற்படுத்தும் முறையில், இறைவார்த்தையைப் பரப்பவும், அதைப் பகிர்ந்துகொள்ளவும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு, இளையோர் தீர்மானித்தனர்.

7வது ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்ட 21 ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளையோர் எடுத்துள்ள இத்தீர்மானத்தை, இந்நிகழ்வின் நிறைவுத் திருப்பலியில், அனைத்து இளையோரின் சார்பாக, இரு இளையோர் வாசித்தனர்.

தொழில்நுட்பமும், சமூக ஊடகங்களும் இளையோரின் சமூக வாழ்வில் ஓர் அங்கமாக மாறியுள்ளவேளை, காழ்ப்புணர்வு, பகைமை போன்ற எதிர்மறை நடவடிக்கைகளுக்குப்  பயன்படுத்தாமல், கடவுளின் வார்த்தையைப் பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்க்குத் தூண்டுதலாக வாழவும், இவற்றைப் பயன்படுத்த உறுதி எடுத்துள்ளோம் என, அந்த இரு இளையோரும் அறிவித்தனர்.

மேலும், 7வது ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளில், இந்தோனேசிய மிதவாத முஸ்லிம் நிறுவனங்களைச் சார்ந்த, நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர் என, ஆசியச் செய்திக் குறிப்பு கூறுகின்றது.  

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.