2017-08-08 15:33:00

இடைக்கால போர் நிறுத்தம் அல்ல, அமைதி ஒப்பந்தமே தேவை


ஆக.08,2017. இரு கொரிய நாடுகளுக்கு இடையே உண்மையான அமைதி வேண்டும் என, கொரிய தீபகற்பத்தில் போர் நிறுத்தப்பட்டு, இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதன் 64ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பல்சமயத் தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.

1953ம் ஆண்டு ஜூலை 27ம் தேதியன்று, இரு கொரிய நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தப்பட்டதன் நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட, கத்தோலிக்க, பிற கிறிஸ்தவ மற்றும் புத்தமதத் தலைவர்கள், இவ்வாறு அழைப்பு விடுத்தனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய, கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் பேராயர், Hyginus Kim Hee-joong அவர்கள், கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவவில்லையெனில், அது, வட கிழக்கு ஆசியா முழுவதையும் பாதிக்கும் என எச்சரித்தார். 

கொரிய தீபகற்பம் மற்றுமொரு போருக்குத் தயாராகி வருகின்றது என்றும், எங்களுக்கு இடைக்கால போர் நிறுத்தம் அல்ல, அமைதி ஒப்பந்தமே தேவை என்றும் கூறினார், பேராயர் Kim Hee-Joong.

வட கொரியா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எண்ணத்தில், ஏவுகணைத் தாக்குதலைத் தடுக்கும் அமைப்பை (THAAD), அமெரிக்க ஐக்கிய நாடு உருவாக்கியிருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார், பேராயர் Kim Hee-Joong.

தென் கொரியாவின் Seongju நகரில், ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற்ற இந்நிகழ்வில், பல்வேறு மதங்களைச் சார்ந்த ஏறத்தாழ 400 பேர் கலந்துகொண்டனர்.

1953ம் ஆண்டு ஜூலை 27ம் தேதியன்று, இரு கொரிய நாடுகளுக்கிடையே போர் நிறுத்தப்பட்டு, இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, இன்றும் அமலில் உள்ளது எனக் கூறப்படுகின்றது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.