2017-08-05 15:26:00

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடை செய்யும் சட்டம்


ஆக.05,2017. அரபு உலகில் சுதந்திரமும், சனநாயகமும் கேட்டு ஆரம்பித்த அரபு வசந்தம் என்ற எழுச்சி, பல நாடுகளில் எதிர்பார்த்த நன்மைகளைக் கொணரவில்லையெனினும், மொரோக்கோ மற்றும் துனிசியாவில், சில நேர்மறை விளைவுகளைக் கொணர்ந்துள்ளது என்று, ஆசியச் செய்தி கூறுகின்றது.

மொரோக்கோவில், சமய எதிர்ப்பு நடவடிக்கைக்காக மரண தண்டனை நிறைவேற்றுதல் சட்டத்திற்குப் புறம்பானது என, அந்நாட்டின் சமய விவகாரங்களுக்கான Ulema உயர்மட்ட குழு, அண்மை மாதங்களில் ஏற்றுக்கொண்டுள்ளது. அதோடு, மொரோக்கோ குடிமக்கள், இஸ்லாமிலிருந்து வேறு மதத்திற்கு மாறுவதற்கும், இக்குழு, முழு உரிமை அளித்துள்ளது. இதன்படி, உலகளாவிய மனித உரிமைகள் அறிக்கை எண் 18ன்படி, சமய சுதந்திரத்திற்குப் பாதுகாப்பு அளிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், துனிசியா நாட்டில், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் சட்டம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெண்களுக்கு எதிரான எல்லாவிதமான வன்முறைகளும் பாகுபாடுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன மற்றும், பாலினங்களுக்கிடையே சமத்துவம் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

துனிசியா நாட்டின் தேசிய குடும்பக்கட்டுப்பாடு நிறுவனத்தின்படி, ஏறத்தாழ ஐம்பது விழுக்காட்டுப் பெண்கள், குடும்பங்களில் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர் எனத் தெரிய வருகிறது.

அரபு வசந்தம் என்ற கிளர்ச்சி, 2011ம் ஆண்டில், துனிசியா நாட்டில்தான் முதலில் ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.