2017-08-05 15:30:00

ஜப்பான் ஆயர்களின் அமைதிக்கான பத்து நாள்கள்


ஆக.05,2017. வன்முறையற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் வழியாக, அன்பு வன்முறையை வெற்றிகொள்ளும் என, ஜப்பான் ஆயர் பேரவை, அமைதிக்கான பத்து நாள்கள் என்ற நிகழ்வுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது.

1945ம் ஆண்டில், ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகளுக்குப் பலியான மக்களின் நினைவாக, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 6ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை, அமைதிக்கான பத்து நாள்கள் என்ற கருத்துடன், விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றைக் கடைப்பிடிக்கும் ஜப்பான் ஆயர்கள், இஞ்ஞாயிறன்று ஆரம்பிக்கும் இந்நிகழ்வுக்கென வெளியிட்டுள்ள செய்தியில், இவ்வாறு கூறியுள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், 2017ம் ஆண்டின் உலக அமைதி நாள் செய்தியை மையப்படுத்தி, செய்தி வெளியிட்டுள்ள ஜப்பான் ஆயர்கள், எழுபது ஆண்டுகளுக்குமுன், ஜப்பான் அரசியலமைப்பில், அமைதியாக வாழ்வதற்கு வழங்கப்பட்ட உரிமையை, மீண்டும் உறுதி செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.

அமைதி, இராணுவ பலத்தால் அமைக்கப்பட முடியாதது என்று, ஜப்பான் ஆயர்கள் சார்பில் இச்செய்தியை வெளியிட்டுள்ள, ஆயர் பேரவைத் தலைவரான நாகசாகி பேராயர், Joseph Mitsuaki Takami அவர்கள், வடகிழக்கு ஆசியாவோடும், உலகோடும் அமைதியில் வாழ்வதற்கு, நேர்மையான மற்றும், உறுதியான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு, ஜப்பானிய அரசுக்கும், குடிமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின்போது (1939-45), 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம்  தேதி காலை 8.16 மணிக்கு, ஹிரோஷிமா நகரத்தில், அமெரிக்க ஐக்கிய நாடு, B-29 என்ற அணுகுண்டை வீசியதில், உடனடியாக ஏறக்குறைய எண்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர் மற்றும், அந்நகரத்தின் 90 விழுக்காடு பகுதி அழிந்தது. பின்னர், கதிர்வீச்சால், பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர். இதற்கு மூன்று நாள்கள் சென்று, ஆகஸ்ட் 9ம் தேதி, நாகசாகி நகரத்தில் வீசப்பட்ட B-29 என்ற அணுகுண்டால், ஏறக்குறைய நாற்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.