2017-08-05 14:16:00

ஆண்டவரின் தோற்றமாற்றம் விழா : ஞாயிறு சிந்தனை


ஆகஸ்ட் 6, இஞ்ஞாயிறு, நாம் கொண்டாடும் ஆண்டவரின் தோற்றமாற்றம் நிகழ்வு, பல்வேறு உன்னத எண்ணங்களை நமக்குள் உருவாக்குகின்றது. அத்துடன், இந்நிகழ்வு கொண்டாடப்படும் ஆகஸ்ட் 6ம் தேதி, வேறுபல வேதனை எண்ணங்களையும் நம் உள்ளத்தில் விதைக்கின்றது. ஆம், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நிகழ்த்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல், மனித வரலாற்றை உருமாற்றியது. உருகுலைத்தது என்பதே பொருத்தமான சொல்...

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஹாரி ட்ரூமன் (Harry Truman) அவர்களும், ஏனைய அரசு அதிகாரிகளும், அணுகுண்டு தாக்குதலை நடத்த, ஆகஸ்ட் 6ம் தேதியைத் தேர்ந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். நிச்சயம், அவர்கள், ஆகஸ்ட் 6ம் தேதி கொண்டாடப்படும் விழாவை ஒரு காரணமாக எண்ணியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், தோற்றமாற்றம் விழாவன்று அணுகுண்டு தாக்குதல் நடைபெற்றதால், இவ்விரு நிகழ்வுகளையும் இணைத்து சிந்திக்க, நமக்கோர் அழைப்பு விடப்பட்டுள்ளது.

அணுகுண்டு வீசப்பட்ட நேரம், காலை 8.16. அந்த நேரத்தைச் சற்று எண்ணிப்பார்ப்போம். அது, ஆகஸ்ட் 6ம் தேதி என்பதால், ஹிரோஷிமாவில் இருந்த பல கத்தோலிக்கக் கோவில்களில், தோற்றமாற்ற நிகழ்வைக் கூறும் நற்செய்தி ஒலித்திருக்கும். மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் இடம்பெற்றுள்ள தோற்றமாற்றம் நிகழ்வைப் பதிவுசெய்ய, நற்செய்தியாளர்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளுக்கும், அணுகுண்டு தாக்குதலைக் கண்டவர்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளுக்கும் உள்ள ஒப்புமை, நம் கவனத்தை ஈர்க்கின்றது.

தோற்றமாற்றத்தைப் பற்றி கூறும் நற்செய்தியில், இயேசுவின் முகம் கதிரவனைப்போல் ஒளிர்ந்தது; அவரது ஆடைகள், ஒளிபோன்று வெண்மையாயின; ஒளிமயமான மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது; அம்மேகத்திலிருந்து குரலொன்று ஒலித்தது என்பவை, நற்செய்தியில் பதிவாகியுள்ள கூற்றுகள்.

அணுகுண்டு தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்தவர்கள், தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டபோது, அவர்களில் பலர், பூமியில் விழுந்த சூரியன், ஒளிமயமான மேகம், இடிமுழக்கம், நிலநடுக்கம் ஆகிய சொற்களைப் பயன்படுத்தினர்.

தோற்றமாற்றத்தால் உருவான ஒளி, மேகம், ஒலி ஆகியவை நம்பிக்கையைக் கொணர்ந்தன. அணுகுண்டு தாக்குதலால் உருவான ஒளி, மேகம், ஒலி ஆகியவை, அழிவைக் கொணர்ந்தன, மனித குலத்தின் மீதிருந்த நம்பிக்கையைத் தகர்த்தன.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6, 9 ஆகிய இரு நாட்கள் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில், அமெரிக்க ஐக்கிய நாடு நிகழ்த்திய அணுகுண்டு தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவுகளைப்பற்றி நாம் பக்கம்பக்கமாக வாசித்துவிட்டோம். எனவே புள்ளிவிவரங்களில் நாம் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம். அணுசக்தியின் பாதகமான விளைவுகளை நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொண்டுள்ளோமா என்பதே நம் கவலை. ஹிரோஷிமா அணுகுண்டு அழிவு முதல், 2011ம் ஆண்டில் நிகழ்ந்த Fukushima அணு உலை விபத்து வரை, மனிதகுலம், அணுசக்தியை இன்னும் நம்பி வாழ்கிறதே என்ற கவலையை, இறைவனிடம் எடுத்துச்சொல்லும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

அணுசக்தியை, அணுஉலைகளைப் பற்றிய கருத்துக்கள், ஒரு ஞாயிறு வழிபாட்டிற்கு தேவைதானா என்ற கேள்வி எழலாம். நம் வாழ்வை இன்று பெருமளவில் பாதிக்கும் ஓர் உண்மையை, கிறிஸ்தவர்கள் என்ற முறையில், விசுவாசக் கண்ணோட்டத்துடன் காண்பதற்கு, ஆண்டவரின் தோற்றமாற்றம் விழாவும், முதல் அணுகுண்டு தாக்குதலும் இணைந்துவந்த ஆகஸ்ட் 6ம் தேதி, நல்லதொரு தருணம்தானே! இந்த ஆன்ம ஆய்வை மேற்கொள்ள இறைவனின் இல்லம் தகுந்த இடம்தானே!

அணு சக்தியை காப்பாற்ற, பொய்மையில் நாம் வாழ வேண்டியுள்ளது என்பது, ஒரு முக்கியமான எண்ணம். அணுசக்தியின் ஆபத்தான உண்மைகள் மக்களிடமிருந்து எப்போதும் மறைக்கப்பட்டுள்ளன என்பதற்கு, வரலாற்றில், பல வலுவான சான்றுகள் உண்டு. ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்க அரசு, அணுகுண்டுகளை வீசியபோது, மனசாட்சியுள்ள பல்லாயிரம் அமெரிக்க மக்கள், சங்கடமான கேள்விகளை எழுப்பினர்.  

அவர்களது குரலை அடக்கும்வண்ணம், அமெரிக்க அரசு அறிக்கைகளை வெளியிட்டது. இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவர அணுகுண்டு தாக்குதல்கள் தேவைப்பட்டன என்று பேசி, மக்களை நம்பச்செய்தது. ஆயினும், அன்றுமுதல் இன்றுவரை, அமெரிக்கச் சமுதாயம் அந்தப் பொய்யைச் சீரணிக்கமுடியாமல் தவிக்கிறது. இதில் கூடுதலான ஓர் எண்ணம் என்னவெனில், ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8.16 மணிக்கு, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது, அமெரிக்காவில் இரவு நேரம். மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அந்த உறக்கத்திலிருந்து மக்கள் விழித்தெழுந்துவிடக்க்கூடாது என்ற குறிக்கோளுடன், மேலும், மேலும் பல பொய்கள் மக்களைச் சென்றடைந்தன. அந்த உறக்கத்திலிருந்து அமெரிக்க மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது கசப்பான உண்மை.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதும், அமெரிக்க அரசுத்தலைவர் ட்ரூமன் அவர்கள் விடுத்த ஓர் அறிக்கை இவ்வாறு இருந்தது: "கடவுளின் பராமரிப்புக்கு நாம் நன்றி கூறுகிறோம். ஜெர்மன் நாட்டவர் கண்டுபிடிக்க இயலாத அணுகுண்டை நாம் முதன்முதலில் கண்டுபிடித்து, அதை பயன்படுத்தினோம். வெற்றிகண்டோம்" என்று அவர் கூறினார். அமெரிக்க அரசுத்தலைவர் ட்ரூமன் அவர்கள் கூறிய வெற்றி, உண்மையிலேயே வெற்றிதானா என்பதை நாம் சிந்திக்கும்போது, இயேசு, தன் தோற்றமாற்ற நிகழ்வுக்கு முன், சீடர்களுக்குக் கூறிய ஒரு புகழ்பெற்ற இறைவாக்கியம் நம் நினைவுக்கு வருகிறது.

தோற்றமாற்ற நிகழ்வுக்கு முன்னதாக, இயேசு, தன் சிலுவை மரணத்தைக் குறித்து சீடர்களிடம் கூறினார். (மத். 16:21) அதைக் கேட்ட பேதுரு, "ஆண்டவரே! இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்று வீரமுழக்கமிட்டபோது, "என் கண்முன்னே நில்லாதே சாத்தானே!" என்று இயேசு அவரைக் கடிந்துகொண்டதோடு நிறுத்திவிடவில்லை. தன்னைப் பின்செல்ல விரும்புவோர், சிலுவையைத் தூக்கிக்கொண்டு, தன் பின்னே வரவேண்டும் என்ற சவாலையும் முன்வைத்தார். இதைத் தொடர்ந்து, இயேசு எழுப்பிய ஒரு கேள்வி, தன் சீடர்களுக்கு மட்டுமல்லாமல், மனிதர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்ட சவாலாக இன்றுவரை அமைந்துவந்துள்ளது: "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும், தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?" (மத். 16:26).

ஜெர்மானியர்களுக்கு முன்னதாக, அணுகுண்டை தாங்கள் கண்டுபிடித்துவிட்டதால், இவ்வுலகையே வென்றதுபோன்ற ஓர் உணர்வுடன், அரசுத்தலைவர் ட்ரூமன் அவர்கள் பேசியது, இயேசு கூறிய அந்தச் சொற்களை நினைவுக்குக் கொணர்கின்றது.

1945ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல்களை நியாயப்படுத்த பல பொய்கள் சொல்லப்பட்டதுபோல், உலகில் தற்போதுள்ள அணுஆயுதங்களைப் பற்றியும் பல்லாயிரம் பொய்கள் நம்மிடையே உலவி வருகின்றன. உலகில் உள்ள அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், இந்த உலகம் முழுவதையும் ஐந்து முறைக்கும் அதிகமாக நாம் அழிக்கலாம் என்று கூறப்படுகிறது.

உலகை அழிப்பதற்கு அணு ஆயுதங்கள் மட்டும் போதாதென்று, உலகின் பெரும்பாலான நாடுகள், அணு உலைகளைக் நம்பிவருகின்றன. அணு உலைகளைப் பற்றியும், இதுவரை அணு உலைகளில் ஏற்பட்டுள்ள விபத்துக்களைப் பற்றியும் ஏகப்பட்ட பொய்கள் தொடர்ந்து கூறப்படுகின்றன. அணு ஆலைகளில் உருவாகும் கழிவுகள் பூமியில் புதைக்கப்படுவதால், அந்த நிலம் பலநூறு ஆண்டுகளுக்கு கதிரியக்கம் கொண்டதாக மாறுகிறது என்பதையும், அங்கு எந்த ஒரு தாவரமோ, உயிரினமோ வாழமுடியாது என்பதையும் பற்றி யாரும் பேசுவதே கிடையாது. இதில் மற்றொரு கொடுமை என்னவெனில், முதல்தர நாடுகளில் உருவாக்கப்படும் அணுக்கழிவுகள், வறுமைப்பட்ட நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நிலத்தடியில் புதைக்கப்படுகின்றன. இந்த உண்மைகள் எதுவும் வெளிப்படுவது கிடையாது.

தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் உருவாக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தைப்பற்றிய முழு விவரங்களையும் வெளியிடுமாறு மக்கள் போராடினர். முழு விவரங்களும் இதுவரைச் சொல்லப்படவில்லை. கூடங்குளத்தில் மட்டுமல்ல, உலகின் அனைத்து நாடுகளிலுமே அணு உலைகளைப்பற்றிய முழு உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு வருகின்றன. அணுசக்தியை காப்பாற்ற வேண்டுமெனில், பொய்யையும் நாம் கண்ணும்கருத்துமாய் காப்பாற்ற வேண்டியிருக்கும்.

இவ்வளவு ஆபத்தான அணுசக்தி நமக்குத் தேவைதானா? மாற்று சக்திகளை நாம் பயன்படுத்த முடியாதா? என்ற கேள்விகள் எழுகின்றன. அணுசக்திக்கு மாற்றாக எத்தனையோ வகை இயற்கைச் சக்திகளை நாம் பயன்படுத்த முடியும். நீர், காற்று, சூரியஒளி என்ற அனைத்தையுமே நாம் சக்திகளாக மாற்றமுடியும். அப்படி நாம் பயன்படுத்தும் இயற்கைச் சக்திகளைக்கொண்டு நமது தேவைகளை நிறைவு செய்துகொள்ளலாம். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், கட்டுக்கடங்காமல் வளர்ந்திருக்கும் நமது பேராசைகளை நிறைவேற்றும் ஆற்றல், இந்தச் சக்திகளுக்குக் கிடையாது. இதுதான் பிரச்சனை.

நமது பேராசையால் விளையும் அழிவுகள், அடுத்த தலைமுறையையும் சேர்த்து பாதிக்கின்றன என்பது மிக வேதனை தரும் உண்மை. இன்று நாம் கொண்டாடும் தோற்றமாற்ற நிகழ்வைத் தொடர்ந்து, முதல் மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ள ஒரு புதுமை, அடுத்தத் தலைமுறையை நோக்கி நம் சிந்தனைகளைத் திருப்புகிறது.

கதிரவனைப்போன்ற ஒளியுடன் இயேசுவின் தோற்றமாற்றம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தீய ஆவி பிடித்த ஒரு சிறுவனை இயேசு குணமாக்கினார். தீயிலும், தண்ணீரிலும் அச்சிறுவனை விழச்செய்த தீய ஆவியை இயேசு விரட்டினார்.

ஹிரோஷிமாவைத் தாக்கிய அணுகுண்டுக்கு அமேரிக்கா சூட்டியிருந்த பெயர், Little Boy - சின்னப்பையன். 'சிறுவன்' அல்லது 'சின்னப்பையன்' என்ற அணுகுண்டு, ஹிரோஷிமா நகரில் விழுந்து, கதிரவனைப்போல் எரிந்தபோது, ஆயிரமாயிரம் சிறுவர், சிறுமியர், தீயில் விழுந்து சாம்பலாயினர். இன்னும் பல்லாயிரம் சிறுவர், சிறுமியர் கொடிய நோய்களால் மெல்ல, மெல்ல கருகி, சாம்பலாயினர். அவர்களில் ஒருவர் - சடக்கோ சசாக்கி (Sadako Sasaki) என்ற பெண் குழந்தை.

1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு விழுந்தபோது, சடக்கோவுக்கு 2 வயது. பத்தாண்டுகள் கழித்து, அச்சிறுமிக்கு, இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டது. அவருக்கும், இன்னும் பலநூறு சிறுவர், சிறுமியருக்கும் உருவான இரத்தப் புற்றுநோய், அணுக்கதிர் வீச்சினால் உருவானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி சடக்கோ, இனி ஓராண்டு வாழக்கூடும் என்று கூறப்பட்டது. சாவதற்கு தான் விரும்பவில்லை என்று, அவர் கூறியபோது, அச்சிறுமியின் தோழிகள், அவரிடம், 'காகித நாரைகள்' பற்றிய பாரம்பரியக் கதையைக் கூறினர்.

அதாவது, ஒருவர், 1000 காகித நாரைகளைச் செய்தால், அவர் விழையும் ஓர் ஆசை நிறைவேறும் என்ற கதையைச் சொன்னார்கள். அதன்படி, சிறுமி சடக்கோ, காகித நாரைகளைச் செய்ய ஆரம்பித்தார். அவர் 644 நாரைகள் செய்து முடித்ததும் இறந்தார். அவர் இறந்ததும், அவரது நண்பர்கள் சேர்ந்து, பல்லாயிரம் காகித நாரைகளைச் செய்து, நிதி திரட்டி, சிறுமி சடக்கோ நினைவாக ஒரு சிலையை நிறுவினர்.

இன்றளவும், காகித நாரைகளை, சிறு குழந்தைகள் செய்து, அந்தச் சிலைக்கருகே காணிக்கையாக வைக்கின்றனர். சிறுமி சடக்கோ, 1000 நாரைகளைச் செய்யத் துவங்கிய வேளையில், அவர் மனதில் என்னென்ன ஆசைகள் இருந்திருக்கும் என்பதைச் சிறிது கற்பனை செய்து பார்க்கலாம். தான் உயிர் வாழவேண்டும் என்ற ஆசை, கட்டாயம் அச்சிறுமியின் மனதில் இருந்தது. அத்துடன், தான் துன்புறுவதுபோல், இனி உலகில் எந்தக் குழந்தையும் துன்புறக்கூடாது என்ற ஆசையும் அக்குழந்தையின் மனதில் தோன்றியிருக்கும் என்று நம்பலாம்.

இன்றும், சடக்கோவின் சிலைக்கருகே காகிதப் பறவைகளைக் காணிக்கையாக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஹிரோஷிமாவில் நிகழ்ந்தது, இனி, உலகில் ஒருபோதும் நிகழக்கூடாது என்ற ஆசையுடன் இந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர். அக்குழந்தைகள் ஆசைப்படும் அமைதியான உலகை உருவாக்குவது, நமது தலைமுறையின் கடமை.

உலகில் அணு ஆயுதங்கள் முற்றிலும் ஒழியவேண்டும்; வன்முறையை, பல வடிவங்களில் கட்டவிழ்த்துவிடும் மனிதர்களின் வெறி அடங்கவேண்டும் என்ற நமது ஆசைகள், வெறும் காகிதப் பறவைகளாக தொங்கிக் கொண்டிராமல்,  உண்மையானப் பறவைகளாக விடுதலை வானில் சிறகடித்துப் பறக்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

நம்மை உருமாற்றவும், நம்மை ஆட்டிப்படைக்கும் சுயநலம் என்ற தீய ஆவியை விரட்டவும் வலிமை கொண்ட ஆண்டவனை நம்பாமல், பேராசை வெறி என்ற தீய ஆவியால் நாம் ஆட்கொள்ளப்பட்டால், ஆண்டவனை ஒதுக்கிவிட்டு, அணுசக்திக்குக் கோவில் கட்டி கும்பிட வேண்டியிருக்கும், எச்சரிக்கை!!!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.