2017-08-04 15:14:00

மகாராஷ்டிரா சமூக புறக்கணிப்புத் தடைச் சட்டத்திற்கு வரவேற்பு


ஆக.04,2017. இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தில், பல்வேறு சாதிகளைச் சேர்ந்த மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு உதவும் வகையில், கொண்டுவரப்பட்டுள்ள கண்டிப்பான விதிமுறைகளை வரவேற்றுள்ளது, இந்தியக் கிறிஸ்தவர்களின் உலகளாவிய அவை (GCIC).

சமூகப் புறக்கணிப்பிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படுவதை ஊக்குவிக்கும் சட்டவரைவு ஒன்றை, 2016ம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநில அரசு கொண்டுவந்தது. இந்த சட்டவரைவு, தற்போது குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ளது குறித்து, ஆசியச் செய்தியிடம் கருத்து தெரிவித்தார், இந்தியக் கிறிஸ்தவர்களின் உலகளாவிய அவைத் தலைவர், சாஜன் ஜார்ஜ் (Sajan K George).

இப்புதிய சமூகப் புறக்கணிப்புத் தடை சட்டம், தலித் கிறிஸ்தவர்கள் போன்ற சில வகுப்பினர் ஒடுக்கப்படுவதை நிறுத்துவதற்கு கொண்டுவரப்பட்டுள்ள சரியான நடவடிக்கை என்றுரைத்த ஜார்ஜ் அவர்கள், இச்சட்டம் இந்தியாவில், நியாயமாக அமல்படுத்தப்பட்டால், நம் சமூகங்கள், மனிதாபிமானம் நிறைந்தவைகளாக அமைய உதவும் எனத் தெரிவித்தார்.

இந்தப் புதிய சட்டம், எல்லாவிதமான மனித உரிமை விவகாரங்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது எனவும், அறநெறி சார்ந்த மற்றும், சமூக அமைப்பிலான அனைத்துப் பாகுபாடுகளையும் தடை செய்கின்றது எனவும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.