2017-08-04 15:25:00

சகிப்புத்தன்மை, ஒருமைப்பாட்டுணர்வை ஊக்குவிக்க அழைப்பு


ஆக.04,2017. நாம் அனைவரும், சகிப்புத்தன்மையையும், ஒருமைப்பாட்டுணர்வையும் ஊக்குவிப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என, 7வது ஆசிய இளையோர் நாள் ஆரம்ப நிகழ்வில், இந்தோனேசிய அமைச்சர் ஒருவர் கூறினார்.

இந்தோனேசியா நாட்டின் யோக்யகார்த்தாவில் நடைபெற்றுவரும் 7வது ஆசிய இளையோர் நாள் நிகழ்வில் உரையாற்றிய, இந்தோனேசிய சமய விவகாரத்துறை அமைச்சர், Lukman Hakim Saifuddin அவர்கள், இவ்வாறு கூறினார்

நாம் பிறந்தது முதல், பல்வேறு இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும், மதங்கள் மத்தியில் வளர்ந்து வருகிறோம் என்றும், ஆசிய இளம் கத்தோலிக்கர், ஆசிய நாடுகளில் விவிலியத்தின் மகிழ்வைப் பரப்ப வேண்டுமென்றும், அமைச்சர், Saifuddin அவர்கள் கூறினார்.

ஆசியக் கண்டத்தின் பன்மைத்தன்மை, இறைவனின் ஆசீர்வாதம் என்றும், இத்தகைய மிகச் சிறப்பான சமூகச் சூழலில், வேற்றுமைகளைக் களைந்து, எல்லாரோடும், சகிப்புத்தன்மையும், ஒருமைப்பாட்டுணர்வும் கொண்டு வாழுமாறும், கேட்டுக்கொண்டார், இந்தோனேசிய அமைச்சர் Saifuddin. 

யோக்யகார்த்தாவில், ஆகஸ்ட் 2, இப்புதனன்று ஆரம்பித்துள்ள 7வது ஆசிய இளையோர் நாள், ஆகஸ்ட் 6, வருகிற ஞாயிறோடு நிறைவடையும். இந்நிகழ்வில், ஆறு கர்தினால்கள், 52 ஆயர்கள், 158 அருள்பணியாளர்கள், 29 அருள்சகோதரிகள், 12 அருள்சகோதரர்கள் உட்பட, 2140 பேர் கலந்துகொள்கின்றனர். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.