2017-08-03 15:19:00

தமிழ் நீதிபதி சிங்கள மெய்க்காப்பாளர் குடும்பத்திற்கு உதவி


ஆக.03,2018. இலங்கையில் பணியாற்றும் தமிழ் நீதிபதி ஒருவர், தன் மெய்க்காப்பாளர் ஒருவர் பணியில் உயிர் துறந்ததையடுத்து, அவரது இரு குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முழு பொறுப்பேற்றுள்ளது, ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மாணிக்கவாசகர் இளஞ்செழியன் என்ற நீதிபதி மீது, ஜூலை 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில், நீதிபதியைக் காப்பதற்கு, தன் உயிரை பலியாக்கினார், அவரது மெய்க்காப்பாளரான சரத் ஹேமச்சந்திரா.

தன் மெய்க்காப்பாளரின் தியாகத்தை பெரிதும் மதித்த நீதிபதி இளஞ்செழியன் அவர்கள், கைம்பெண்ணான ஹேமச்சந்திராவின் மனைவியாரின் காலில் விழுந்து வணங்கியது, ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது.

மெய்க்காப்பாளர் ஹேமச்சந்திராவின் அடக்கத்தையடுத்து, அவரது இரு குழந்தைகளையும் தான் உயிரோடு இருக்கும்வரை காப்பாற்றி, படிக்கவைப்பதாக நீதிபதி இளஞ்செழியன் அவர்கள், உறுதி வழங்கியுள்ளார்.

தமிழினத்தைச் சேர்ந்த ஒருவர், சிங்கள இனத்தைச் சேர்ந்த தன் மெய்க்காப்பாளர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் காட்டியுள்ள அன்பும், அக்கறையும், இவ்விரு இனத்தவரிடையே நிலவும் காயங்களை ஆற்றும் வலிமை கொண்டது என்று, பல மனித நேய அமைப்பினர் கருத்து தெரிவித்தனர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.