2017-08-03 15:18:00

Knights of Columbus : ஈராக்கிற்கு 20 இலட்சம் டாலர்கள் உதவி


ஆக.03,2018. அமெரிக்க ஐக்கிய நாட்டின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றுவரும் Knights of Columbus அமைப்பின் உச்சிமாநாட்டில், இவ்வமைப்பினரின் சார்பில், ஈராக் நாட்டிற்கு 20 இலட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய தீவிரவாதிகளால் நினிவே சமவெளியில் இருந்த பெரும்பாலான கிறிஸ்தவ கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்பதால், அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது என்று, Knights of Columbus அமைப்பின் தலைமைத் தளபதி, கார்ல் ஆன்டர்சன் அவர்கள் கூறினார்.

மேலும், உலகெங்கும் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களை மையப்படுத்தி, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையுடன் இணைந்து, நவம்பர் 26ம் தேதி முதல், செப வாரம் ஒன்றை Knights of Columbus அமைப்பு ஏற்பாடு செய்கிறது என்பதும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 

12 கர்தினால்கள், 90க்கும் அதிகமான ஆயர்கள், உலகின் பல நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த உச்சி மாநாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியிருந்த வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டது.

மேலும், Knights of Columbus அமைப்பின் ஓர் அங்கமாகிய “Warriors to Lourdes” என்ற குழுவினர், போரினால் காயமுற்ற அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவ வீரர்களை, லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் அழைத்துச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1882ம் ஆண்டு, அருள்பணி Michael McGivney அவர்களால் உருவாக்கப்பட்ட Knights of Columbus அமைப்பு, இன்று 19 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.