2017-08-01 15:34:00

ஈராக்கின் நினிவே மக்களின் விடுதலைப் பயணம்


ஆக.,01,2017. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து, ஈராக்கின் நினிவே மாவட்டத்திலிருந்து வெளியேறிய மக்களுள் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளதாக, ஈராக் நாட்டின் குடியேற்றதாரர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டு முதல், அப்பகுதியிலிருந்து குடிபெயர்ந்தோர், ஏறத்தாழ எட்டு இலட்சத்து இருபதாயிரம் என ஏற்கனவே அறிவித்துள்ள இந்த அமைச்சகம், மொசூல் நகரம் தற்போது விடுவிக்கப்பட்டதிலிருந்து, நினிவே பகுதிக்குத் திரும்பிவரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது.

தங்கள் சொந்த இடங்களுக்கு ஈராக் மக்கள் திரும்பி வருவது இடம்பெறுகின்றபோதிலும், கிறிஸ்தவர்கள் தங்கள் பூர்வீக இடங்களுக்கு வருவது குறைவாகவே இடம்பெறுவதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கருத்து வெளியிட்ட கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள், மொசூல் நகர் விடுவிக்கப்பட்டதால் மட்டும் அங்குள்ள ஆபத்துக்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுவிடவில்லை, மேலும், இஸ்லாமியத் தீவிரவாதிகளின் ஆக்ரமிப்பின்போது பல வீடுகள் முற்றிலுமாக சேதமாக்கப்பட்டுள்ளதால், மக்கள் திரும்பி வரமுடியாத நிலை உள்ளது என்றார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.