2017-07-31 15:50:00

பாசமுள்ள பார்வையில்.. ஒரு தாயின் கண்ணீர்ப் பகிர்வு


சென்னையில் முதியோர் காப்பகம் ஒன்றில் தஞ்சம் தேடியிருந்த தாய் ஒருவர், ஊடகம் வழியே பகிரந்துகொண்டவை இதோ...

வசதியான குடும்பத்தில் பிறந்த நான், செல்லமாக வளர்க்கப்பட்டு, நல்ல பண்புடைய மனிதருக்குத் திருமணமும் செய்து வைக்கப்பட்டேன். என் கணவரோடு இருந்தவரை, அவர் என்னைப் பார்த்து, ஒருநாள்கூட, கோபத்திலும்கூட, ஒரு சுடுசொல் சொன்னதில்லை. அவர் செய்தித்தாள் ஏஜென்ட் வேலை பார்த்தார். நானும் படித்திருந்ததால் அவருடைய வேலையில் பாதியை, நானே முடித்துக் கொடுப்பேன். எங்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். பிள்ளைகளை நன்றாக வளர்த்து படிக்க வைக்க வேண்டும் என, என் கணவர் சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்குப் பிறகு உன்னைப் பார்த்துக்கொள்ள மூன்று சிங்கக்குட்டிகள் இருக்கிறார்கள் எனச் சொல்வார் அவர். மூன்று பிள்ளைகளுக்கும் பார்த்துப் பார்த்து சமைத்துப்போடுவேன். தீபாவளி பொங்கல் என வந்தால், அவர்களுக்குச் செலவழிக்கிற காசுக்கு அளவேயிருக்காது. அவர்களுக்காக ஒருநாள் முழுவதும் பட்டினியாகக் கிடந்தபோதுகூட அது எனக்கு கஷ்டமாகத் தெரியவில்லை. மூன்று பிள்ளைகளும் நன்றாக வரவேண்டும் என, ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், தமிழ் எனப் பல மொழிகளையும் கற்றுக்கொள்ள வைத்தார் என் கணவர். எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் குழந்தைகளுக்கு கஷ்டம் தெரியாமல்தான் வளர்த்தோம். பிள்ளைகள் வளர்ந்து திருமணமானதற்குப் பிறகு, அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு தடுப்பு விழுந்தால்போன்று இருந்தது. கடவுள் புண்ணியத்தில் மூன்று பிள்ளைகளும் வசதியாகத்தான் இருக்கிறார்கள். பிள்ளைகள், தனிக்குடும்பங்களாக மாறினபின்,  என் கணவரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. அதனால், எங்களின் அடுக்குமாடி வீட்டை விற்று கடனை அடைத்தோம். கடனைக் கட்டிவிட்டு, விரக்தியில் அவர் வீட்டை விட்டே போய்விட்டார். எங்கே இருக்கிறார் என, இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நான் தனியாளாய்,  நாலைந்து வீட்டில் பாத்திரம் தேய்த்தேன். அதில் கிடைத்த காசை வைத்து வாடகை வீட்டில் இருந்தேன். இப்போது வயதாகி விட்டது. கண்ணும் தெரியவில்லை. வீட்டுவேலைக்கும் போக முடியவில்லை. என்னுடைய துணிகளை எடுத்துக்கொண்டு சின்ன மகன் வீட்டுக்குப் போனேன். அவனும், அவன் மனைவியும், இங்கு எதற்கு வந்தாய் எனத் திட்டினார்கள். என்னை அவர்கள், வீட்டுக்குள்ளேயே நுழைய விடவில்லை. பெரிய பையன் சாதாரணமாவே கோபக்காரன். அவன் வீட்டுக்கும் போகப் பிடிக்கவில்லை. கட்டிக்கொடுத்த மகள் வீட்டுக்கும் நான் தஞ்சம் கேட்டுப் போக முடியாது.

தனிமையில் கண்ணீர் சிந்தும் தாய்களின் வலிகள் உணரப்படுமா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.