2017-07-29 14:40:00

புலம்பெயர்வோருக்கு சட்டமுறையிலான அனுமதி அவசியம்


ஜூலை,29,2017. புலம்பெயரும் மக்கள் நாடுகளுக்குள், சட்டமுறைப்படி நுழைவதற்கு அனுமதிக்கப்படுவது, மனித வர்த்தகம் நிறுத்தப்பட உதவியாயிருக்கும் என, கத்தோலிக்க நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

ஜூலை 30, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும், மனித வர்த்தகத்திற்கெதிரான உலக நாளையொட்டி, கத்தோலிக்க மனிதாபிமான குழுக்கள், துறவு சபைகள், பெண் துறவு சபைகளின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வீட்டுவேலை, பாலியல் தொழில், பிச்சையெடுத்தல், கட்டாயத் திருமணம், உடல் உறுப்புகள் அகற்றப்படல், வாடகைத் தாய், குற்றச் செயல்கள், அடிமைவேலை போன்றவைகளுக்கு, உள்நாட்டிலும், பன்னாட்டு எல்லைகளிலும், மனித வர்த்தகம் இடம்பெறுகின்றது என, பெண் துறவு சபைகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள், மனித வர்த்தகத்திற்குப் பலியாகும்வேளை, குறைந்தது பத்தாயிரம் பேர், இந்த வர்த்தகத்தை நடத்துகின்றனர் என்றும், அக்கூட்டமைப்பு கூறியுள்ளது.

மனித வர்த்தக வலையமைப்பை நிறுத்த வேண்டுமானால், புலம்பெயரும் மக்களுக்கு, பாதுகாப்பான மற்றும், சட்டமுறைப்படியான பாதைகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் எனவும், அக்கூட்டமைப்பு கூறியுள்ளது

உலகளாவிய காரித்தாஸ் நிறுவனம், மனித வர்த்தகத்திற்கெதிரான ஆஸ்திரேலிய கத்தோலிக்க துறவு சபைகள் அமைப்பு, தொமினிக்கன் நீதி, அமைதி அவை, பிரான்சிஸ்கன் பன்னாட்டு அமைப்பு, இயேசு சபை புலம்பெயர்ந்தவர் அமைப்பு, தலித்தா கும் (Talitha Kum) அமைப்பு என, பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.