2017-07-26 15:13:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : தொடக்ககாலக் கிறிஸ்தவம் பாகம் 3


ஜூலை,26,2017. கிறிஸ்தவம் பரவத் தொடங்கிய முதல் நூற்றாண்டுகளில், உரோமைப் பேரரசர்களால், கிறிஸ்தவர்கள் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டனர், அடக்கி ஒடுக்கப்பட்டனர், சிங்கம் போன்ற கொடிய விலங்குகளுக்கு உணவாகப் போடப்பட்டனர், சிலுவையில் அறைந்தும், ஈட்டியால் குத்தியும், பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஆனால், கான்ஸ்டன்டைன், உரோமைப் பேரரசராக ஆட்சிக்கு வந்தபின் நிலைமை தலைகீழாக மாறியது. பெரிய கான்ஸ்டன்டைன், மகா கான்ஸ்டன்டைன், முதலாம் கான்ஸ்டன்டைன் என அழைக்கப்படும் இவர், கி.பி. 306ம் ஆண்டு முதல், கி.பி.337ம் ஆண்டுவரை ஆட்சி செய்தார். உரோம் மில்வியன் பாலத்தில் நடந்த போரில் இவர் வெற்றியடைவதற்குக் காரணமான சிலுவை அடையாளமே, இவர் கிறிஸ்தவத்தைத் தழுவியதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. ஏனெனில் உரோமைப் பேரரசின் சூரியக் கடவுள் வழிபாட்டில் இவர், மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.

அக்காலத்தில், உரோமைப் பேரரசின் இராணுவம், மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள ஏராளமான இடங்களையும், தென்மேற்கு ஐரோப்பா மற்றும், வட ஆப்ரிக்காவின் கடற்கரைப் பகுதிகளையும் கைப்பற்றியது. இவை, நகரங்களையும், கிராமங்களையும் கொண்டு, பல்வேறு கலாச்சாரக் குழுக்கள் வாழும் பகுதியாக அமைந்திருந்தன. பொதுவாகச் சொல்லப்போனால், மேற்கத்திய நாடுகளைவிட, இப்பகுதிகள் அதிகளவில் நகர்மயமாக்கப்பட்டிருந்தன. முந்தைய மாசிடோனிய பேரரசின் கீழிருந்த இந்தப் பகுதிகள், கிரேக்கக் கலாச்சாரத்தின் தாக்கத்தை அதிகம் கொண்டிருந்தன. கி.பி.3ம் நூற்றாண்டில், இலத்தீன் கலாச்சார மயமான இளமையான மேற்குக்கும், கிரேக்கக் கலாச்சார மயமான கிழக்குக்கும் இடையே பிரச்சனைகள் கிளம்பின. எனவே, உரோமைப் பேரரசின் நிர்வாகம், இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. கி.பி.293ம் ஆண்டில், பேரரசர் தியோக்ளேசியன், தனது பேரரசில் புதிய நிர்வாக அமைப்பை உருவாக்கினார். இதன் வழியாக, உரோமைப் பேரரசில் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் பகுதிகளுக்குப் பாதுகாப்பு உறுதி வழங்கினார். தன்னை ஒருங்கிணைக்கும் பேரரசராக, அதாவது அகுஸ்துசாகவும், தனது ஆட்சியில் பங்கெடுக்கும் இளையவரை, சீசராகவும் இவர் உருவாக்கினார். ஆனால் இவ்வமைப்பு வெற்றிபெறவில்லை. பின், பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன், இந்த இரு பிரிவுகளையும் ஒன்றிணைத்து உரோமைப் பேரரசுக்கு, ஒரே அகுஸ்துசாக ஆக்கினார்.

பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன், கிறிஸ்தவத்தை அங்கீகரித்தபின், வரலாற்றில் மிக முக்கியமான நடவடிக்கை ஒன்றை எடுத்தார். அதாவது இவர் தனது பேரரசரின் தலைநகரை, உரோம் நகரிலிருந்து, கான்ஸ்டான்டிநோபிள் நகருக்கு மாற்றினார். துருக்கி நாட்டில் தற்போதுள்ள இஸ்தான்புல் நகரமே, முந்தைய கான்ஸ்டான்டிநோபிள் நகரமாகும். பைசான்டியும் (Byzantium) என்ற கிராமத்தையே, பேரரசின் தலைநகரமாக உருவாக்கி, அதற்கு கான்ஸ்டான்டிநோபிள் என இவர் பெயர் சூட்டினார். கி.பி.330ம் ஆண்டில் இந்நகரத்தின் திறப்பு விழா நடைபெற்றது. புதிய உரோம் எனவும் அழைக்கப்பட்ட கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தை, கிறிஸ்தவ உரோமைப் பேரரசரின் தலைநகரமாக மாற்றினார். இங்கு, அந்நியத் தெய்வ வழிபாடுகளைத் தடைசெய்தார். பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் பெற்ற முதல் வெற்றியைத் தொடர்ந்த 18 ஆண்டுகளில், பேரரசரில் புதிய மதம், புதிய கலாச்சாரம், புதிய மையம் என பல மாற்றங்கள் இடம்பெற்றன. உரோம் நகரில், கிரேக்கக் கலாச்சாரத் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பைசான்டியும் பகுதியில் வாழ்ந்த மக்கள் கிரேக்க மொழியையே பேசினர். எனவே, உரோமைப் பேரரசுக்குப் புதிய தலைநகரை அமைத்ததன் விளைவாக, அப்பேரரசின் பழைய கலாச்சாரம், புதிய கலாச்சாரத்திற்குள் முடங்கிப்போகத் தொடங்கியது. புதிய தலைநகரின் பெயர்கூட, கிரேக்கத் தாக்கத்தைக் கொண்டிருந்தது. கிரேக்க மொழியில், நோபிள் என்றால் நகரம் என்று அர்த்தம். எனவே புதிய தலைநகரம், பேரரசர் கான்ஸ்டன்டைன் பெயரில் கான்ஸ்டான்டிநோபிள் ஆக மாறியது. இந்நகரில் வாழ்ந்த கிரேக்கர்கள், தங்களை உரோமையர்கள் என்றே தொடர்ந்து அழைத்து வந்தனர்.

பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன், கான்ஸ்டான்டிநோபிள் நகரை, கிறிஸ்தவ நகரமாக அறிவித்தார். உடனடியாக கிறிஸ்தவ நினைவிடங்களையும், ஆலயங்களையும் கட்டினார். milion அல்லது milestone என்றழைக்கப்படும் ஒரு மையப் பகுதியை அமைத்தார். இது, நான்கு வெற்றி வளைவுகளையும், ஒரு கோபுரத்தையும் கொண்டிருந்தது. இங்கிருந்து, உரோமைப் பேரரசரில் எல்லாத் தூரங்களும் அளக்கப்படும் எனவும் அறிவித்தார். இதன் அருகே, முதல் ஆலயத்தையும் அமைத்தார் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன். புனித Eireneனின் இந்த ஆலயத்திற்கு, தூய அமைதி என்று பெயரிட்டார் பேரரசர். இந்த ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள தூய மெய்ஞானம்-அதாவது புனித சோஃபியா புனித இடம், பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைனின் இறப்புக்கு முன், கி.பி.360ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. கிறிஸ்தவத்தை அங்கீகரித்து, அதனைப் பரவ உதவிய பேரரசர், கி.பி.326ம் ஆண்டில், தனது மூத்த மகனையும், இரண்டாவது மனைவியையும் கொலை செய்தார். இது இவரது வாழ்வில் கரும்புள்ளியாக நோக்கப்படுகின்றது. இவர், திருமுழுக்குப் பெறத் தாமதித்ததற்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகின்றது. ஏனெனில் இவர் இறப்பதற்கு முன்னர்தான் திருமுழுக்குப் பெற்றார். இவரது நண்பரும், இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான, யுசேபியுஸ், இவருக்குத் திருமுழுக்கு அளித்தார். பாரசீக நாட்டு Sapor என்பவர், கான்ஸ்டன்டைன் மீது போர் தொடுத்தான். அவ்வேளையில் நோயுற்றார் கான்ஸ்டன்டைன். நாடு கடத்தப்பட்டவர்கள் எல்லாரும், மீண்டும் நாடு திரும்பலாம் என்ற அரசாணையை, கடைசி காலத்தில் வெளியிட்டார் பேரரசர் கான்ஸ்டன்டைன். இவர், கி.பி.337ம் ஆண்டில், தனது 64வது வயதில் இறந்தார். கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தில், இவர் கட்டிய திருத்தூதர்கள் ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். இறைவனுக்குப் புகழும் நன்றியும் என்பதே, பேரரசர் கான்ஸ்டன்டைன் சொன்ன இறுதி வார்த்தைகள். இவர், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையில் புனிதராகப் போற்றப்படுகிறார்.

பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைனின் இறப்புக்குப்பின், 2ம் கான்ஸ்டன்டைன் (Constantine II), 2ம் கான்ஸ்டான்டியுஸ் (Constantius II), கான்ஸ்டான்ஸ் (Constans) ஆகிய அவரின் மூன்று மகன்களுக்குள், உரோமைப் பேரரசு பிரிக்கப்பட்டது. இவர்கள் ஏற்கனவே, தந்தையின் பெயரில், சீசர்களாக, பேரரசின் பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர். கிரீஸ், கான்ஸ்டான்டிநோபிள் மற்றும், பேரரசின் கிழக்குப் பகுதி முழுவதையும், 2ம் கான்ஸ்டான்டியுசும், பிரான்ஸ், Gaul, மற்றும் பிரிட்டனை, 2ம் கான்ஸ்டன்டைனும், இத்தாலி மற்றும் இஸ்பெயினை, கான்ஸ்டான்சும் ஆட்சி செய்து வந்தனர். கான்ஸ்டான்டிநோபிளில், அமைதியும் ஞானமும் நிறைந்த ஆலயங்கள் நிறைந்திருந்தாலும், பேரரசின் உடன்பிறப்புகளுக்குள் மோதல்கள் கிளம்பின. இவர்கள் ஆட்சிசெய்யத் தொடங்கியவுடனே, ஆண் வாரிசுகள் கொல்லப்பட்டனர்.  கான்ஸ்டான்சுக்கு எதிராகப் போருக்குச் சென்றபோது, கி.பி.340ம் ஆண்டில், 2ம் கான்ஸ்டன்டைன் கொல்லப்பட்டார். அதற்கு பத்து ஆண்டுகள் சென்று, கான்ஸ்டான்ஸ், ஆட்சியைக் கைப்பற்றுவதில் கருத்தாய் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரால், Gaul பகுதியில் கொல்லப்பட்டார். பின், கி.பி.350ம் ஆண்டிலிருந்து, 2ம் கான்ஸ்டான்டியுஸ் மட்டுமே, சட்டமுறையான பேரரசராக இருந்தார். இவர், உரோமைப் பேரரசு முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க மிகவும் கஷ்டப்பட்டார். இவர் தனது தந்தையைப் போலவே, கிறிஸ்தவத்தில் ஆர்வமாக இருந்தாலும், முக்கியமான தவறு ஒன்றைச் செய்தார். உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியை ஆட்சி செய்யும் பொறுப்பை, தனது உறவினர் ஜூலியனிடம் ஒப்படைத்ததே அத்தவறு.

ஜூலியன், பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைனின் தந்தையின், மற்றொரு மனைவிக்குப் பிறந்த மகனின் மகன். பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைனின் இறப்புக்குப் பின், இடம்பெற்ற உடன்பிறப்புச் சண்டைகளில், பேரரசின் ஆண் வாரிசுகள் கொல்லப்பட்டதில் ஜூலியன் உயிர் தப்பியவர். ஏனெனில் அவருக்கு அப்போது வயது ஆறு. இளம் வயதில் ஏத்தென்சில் கல்வி கற்ற இவர், கிறிஸ்தவத்தில் கண்டிப்பாக வளர்க்கப்பட்டார். ஆனால், இவர் கிரேக்க கலாச்சாரப் பக்தனாக மாறினார். கிரேக்க மொழியில் சிறந்த எழுத்தாளரான இவரின் எழுத்துக்கள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஜூலியனுக்கு 25 வயது நடந்தபோது, Gaulலுள்ள உரோமைப் படைகளின் அதிகாரியாக, அதாவது சீசராக நியமிக்கப்பட்டார். எல்லாரும் வியக்கும் வகையில், இளவயதிலே மிகத் திறமைசாலியாக இவர் விளங்கினார். கி.பி. 359ம் ஆண்டில், பெர்சியாவுக்கு எதிரான போரில், ஜூலியனின் படைகளில் சிறந்தவைகளை கிழக்கு நோக்கி வருமாறு, 2ம் கான்ஸ்டான்டியுஸ் ஆணையிட்டார். ஆனால் அப்படைகள், பாரிசுக்கு அருகிலே முகாம் அமைத்து, ஜூலியனைப் பேரரசராக அறிவித்தன. எனவே இவரைச் சந்திக்க மேற்கு நோக்கி  கான்ஸ்டான்டியுஸ் வந்தபோது, ஆசியா மைனரில், கி.பி.361ம் ஆண்டில் இறந்தார். பின், ஜூலியன், பேரரசரானார். இவரது ஆட்சியில் கிறிஸ்தவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.