2017-07-22 15:20:00

பெத்தியா மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்


ஜூலை,22,2017. இந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள, பெத்தியா (Bettiah) மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, பகல்பூர் மறைமாவட்டத்தின் முதன்மைக்குருவாகப் பணியாற்றிவந்த, அருள்பணி பீட்டர் செபஸ்டியான் கோவெயாஸ் (Peter Sebastian Goveas) அவர்களை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பெத்தியா மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பீட்டர் செபஸ்டியான் அவர்கள், மங்களூர் மறைமாவட்டத்தின் Hosabettu என்ற ஊரில், 1955ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி பிறந்தவர். பகல்பூர் மறைமாவட்டத்திற்கென, 1983ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி, அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்த இவர், உதவிப் பங்குத்தந்தை, பங்குத்தந்தை என, பல்வேறு பங்குத்தளங்களில் பணியாற்றிய பின், 2013ம் ஆண்டு முதல், பகல்பூர் மறைமாவட்டத்தின் முதன்மைக்குருவாகப் பணியாற்றி வந்தார்.

பாட்னா உயர்மறைமாவட்டத்தின் கீழ் இயங்கும், பெத்தியா மறைமாவட்டத்தில் வாழ்கின்ற, ஒரு கோடியே 40 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களில், 5,996 பேர் கத்தோலிக்கர். இம்மறைமாவட்டத்தின், 13 பங்குத்தளங்களில், 55 அருள்பணியாளர்களும், 43 அருள்சகோதரர்களும், 133 அருள்சகோதரிகளும் பணிபுரிகின்றனர். மேலும், இங்கு, 15 குருத்துவ மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.