2017-07-22 16:02:00

தலித் கிறிஸ்தவர்களுக்கு ஆகஸ்ட் 10 கறுப்பு தினம்


ஜூலை,22,2017. இந்தியாவில், கடந்த 67 ஆண்டுகளாக, தலித் கிறிஸ்தவர்கள் பாகுபாட்டால் துன்புற்றுவருவதைச் சுட்டிக்காட்டும் விதமாக, வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி,  கறுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படும் என, இந்திய ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

இத்தினம் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ள, இந்திய ஆயர் பேரவையின் பிற்படுத்தப்பட்ட பணிக்குழுத் தலைவர் ஆயர் நீதிநாதன் அவர்கள், இந்நாளை, அனைத்து மறைமாவட்டங்கள், பங்குகள் மற்றும், நிறுவனங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் வழியாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தலித் பின்புலத்தைக் கொண்ட இந்தியாவின் புதிய குடியரசுத்தலைவருடன், ஆயர்கள் தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளனர், அதேநேரம், கிறிஸ்தவத்தை ஏற்றுள்ள தலித் மக்கள், அரசியலமைப்பின்படி பாகுபடுத்தப்படுவதையும், நாட்டினருக்கு நினைவுபடுத்த விரும்புவதாகவும், அப்பணிக் குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.  

1950ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி கையெழுத்திடப்பட்ட அரசியலமைப்பில், இந்துக்கள் அல்லாத மற்ற மதத்தவர், தலித்துகள் அல்ல என்றிருந்தது. ஆயினும், 1956ம் ஆண்டில் சீக்கியர்களும், 1990ம் ஆண்டில் புத்தமதத்தினரும் இதிலிருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.